எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்


எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 9 Aug 2017 3:45 AM IST (Updated: 9 Aug 2017 1:46 AM IST)
t-max-icont-min-icon

எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று மாவட்ட பாரதீய ஜனதா செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குன்னூர்,

நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி செயற்குழு கூட்டம் குன்னூரில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் நஞ்சுண்ட போஜன் தலைமை தாங்கினார். கோட்ட பொறுப்பாளர் சதீஷ் கலந்து கொண்டு பேசினார். மாவட்ட பொது செயலாளர் ஈசுவரன் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோருக்கு பாராட்டு தெரிவிப்பது. மத்திய அரசு முத்ரா கடன் போன்ற பல தொழிற்கடன்களை அறிவித்துள்ளது. குன்னூரில் உள்ள வங்கிகள் ஏழைகளுக்கு தொழில் கடன்களை வழங்குவதில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதனை மாவட்ட பாரதீய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. மத்திய அரசு அறிவித்துள்ள கடன் திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வங்கிகள் கடன் வழங்க முன் வரவேண்டும்.

நீலகிரி மாவட்டத்தில போதிய மருத்துவ வசதி இல்லாத காரணத்தால் நோயாளிகளை கோவைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசால் அமைக்கப்படும் எய்ம்ஸ் மருத்துவமனையை நீலகிரி மாவட்டத்தில அமைக்க வேண்டும்.

ஊட்டி சோலூர் மற்றும் குன்னூர், ஜெகதளா ஆகிய கிராமங்களில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளிலும், வழிபாட்டு தலங்கள் அருகிலும் டாஸ்மாக் மதுக்கடை திறக்கப்பட்டு உள்ளது. இதனை அப்புறப்படுத்த பல்வேறு மனுக்கள் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே டாஸ்மாக் மதுக்கடைகளை அகற்றும் வரை போராட்டம் நடத்தப்படும்.

குன்னூரில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்வதால் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்குகிறார்கள். எமரால்டு கூட்டு குடிநீர் திட்டம் மத்திய– மாநில அரசின் நிதியின் மூலம் தொடங்கப்பட்டும் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதை கண்டு கொள்ளவில்லை. எனவே குடிநீர் பிரச்சினை தீர்க்க இந்த திட்டத்தை போர்க்கால அடிப்படையில் விரைந்து செயல்படுத்த வேண்டும்.

பத்ரிநாத், அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாரதீய ஜனதா கட்சி கோட்ட பொறுப்பாளர் பாலகுமார் தந்தை மரணத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பொது செயலாளர்கள் மணிகண்டன், சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள், ராமன், குமரன், அன்பு, குன்னூர் நகர தலைவர் குங்குமராஜ், நிர்வாகிகள் கிருஷ்ணகுமார், பாப்பண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story