பள்ளி கல்வித்துறை வெளிப்படையாக செயல்படுகிறது அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
உத்திரமேரூரை அடுத்த திருப்புலிவனம் அரசு உயர்நிலைப்பள்ளி அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்கான தொடக்க விழா திருப்புலிவனம் பள்ளி வளாகத்தில் நடந்தது.
உத்திரமேரூர்,
விழாவுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். அமைச்சர் பென்ஜமின், காஞ்சீபுரம் எம்.பி. மரகதம் குமரவேல், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன், ஆர்.டி.அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியதை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் பேசும்போது கூறியதாவது:–
தமிழக பள்ளி கல்வித்துறை தனியார் பள்ளிகளுக்கு தடையில்லா சான்று, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படையாக செயல்படுகிறது. குற்றச்சாட்டுகள் குறித்து யாருடனும் விவாதிக்க தயாராக உள்ளோம். மக்களின் எதிர்பார்ப்பான நீட் தேர்வு விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், முதன்மை கல்வி அலுவலர் திருவளர்செல்வி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.