தென்மேற்கு பருவமழை குறைந்து வருவதால் சோலையாளர் அணை நிரம்புவதற்கு வாய்ப்பு குறைவு
வால்பாறையில் தென்மேற்கு பருவமழை குறைந்து வருவதால், இந்த ஆண்டில் சோலையார்அணை நிரம்புவதற்கு வாய்ப்பு குறைந்து உள்ளது.
வால்பாறை,
வால்பாறை பகுதியில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்திலிருந்து தென் மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியது. ஆரம்பத்தில் குறைவாக பெய்யத் தொடங்கியது. 16–ந் தேதியிலிருந்து தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து 23–ந் தேதியிலிருந்து 28–ந் தேதி வரை விடியவிடிய கனமழையாக கொட்டித்தீர்த்தது.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 30–ந் தேதியிலிருந்து வால்பாறை பகுதி முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக குறைந்து வந்தது. இதனால் பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் அடிப்படை அணையாக திகழும் சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து கொண்டேயிருந்தது. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையார்அணையின் நீர்மட்டம் கடந்த ஜுலை மாதம் 2–ந் தேதி அதிகபட்சாக 87 அடியை எட்டியது.
அதனை தொடர்ந்து மழை குறைந்து கொண்டே வந்தது. இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது ஓரு சில பகுதியில் மட்டும் நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கன மழை பெய்து வந்தது. இப்போது அந்த மழையும் நின்றுவிட்டது. கடந்த 10 நாட்களாக பெய்த கன மழை காரணமாக ஆங்காங்கே உள்ள ஆறுகளில் இருந்து சோலையார்அணைக்கு வரும் தண்ணீரின் காரணமாக நீர் மட்டம் சற்று அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி சோலையார்அணையின் நீர்மட்டம் 67.90 அடியாக இருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக வால்பாறை பகுதி முழுவதும் மழை குறைந்துவருகிறது. இதனால் சோலையார்அணைக்கு தண்ணீர் வரத்து குறையத்தொடங்கி விட்டது. இதனால் நடப்பாண்டில் அணை நிரம்புவதற்கான வாய்ப்பும் குறைவாக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 5 மி.மீமழையும்,சோலையார்அணையில் 22 மி.மீமழையும்,சின்னக்கல்லாரில் 7 மி.மீ மழையும், நீராரில் 10 மி.மீமழையும் பெய்துள்ளது. சோலையார்அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1207.18 கன அடியாக இருந்து வருகிறது.இதே நாளில் கடந்த ஆண்டு சோலையார்அணையின் நீர்மட்டம் 131.62 அடியாக இருந்தது ஆனால் இந்த ஆண்டு சோலையார்அணை 100 அடியை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.சோலையார்மின்நிலையம்–1 லிருந்து மின்உற்பத்தி செய்யப்பட்டு 410.07 கனஅடித்தண்ணீரும், மாற்றுப்பாதை வழியாக 209.14 கன அடித்தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடப்பட்டுவருகிறது.
இதனால் பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 23.58 அடியாக உயர்ந்துள்ளது. சோலையார்மின்நிலையம் –2 இயக்கப்பட்டு 483.22 கன அடித்தண்ணீர் கேரளாவிற்கு திறந்துவிடப்பட்டுவருகிறது. வால்பாறை பகுதியில் தென்மேற்குபருவமழை கடந்த ஆண்டைவிட கிட்டத்தட்ட 100 மி.மீ குறைவாகவே கிடைத்துள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் வால்பாறை பகுதி மக்களை விட சமவெளிப்பகுதி மக்களுக்கு விவசாயதேவை, குடிதண்ணீர் தேவைகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்குமா என்பதும் சந்தேகமே உள்ளது. மேலும் மின் உற்பத்தியும் பாதிக்கும் நிலை உருவாகும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.