விழுப்புரத்தில் இன்று, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீஸ் ஐ.ஜி.க்கள் நேரில் ஆய்வு
விழுப்புரத்தில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் ஐ.ஜி.க்கள் நேரில் ஆய்வு செய்தனர்.
விழுப்புரம்,
அ.தி.மு.க. நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்–அமைச்சருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா விழுப்புரத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதற்காக விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகில் பிரமாண்டமான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
விழாவில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, எம்.ஜி.ஆரின் உருவ படத்தை திறந்து வைத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ– மாணவிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். தொடர்ந்து, ஏழை, எளிய மக்கள் 41 ஆயிரம் பேருக்கு ரூ.784 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
விழாவில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அ.தி.மு.க. (அம்மா) அணி மாவட்ட செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு வரும் பொதுமக்கள் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை பார்வையிடும் வகையில் அரிய புகைப்பட கண்காட்சி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் மைதானத்தை சுற்றிலும் எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
விழாவிற்கு வரும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் வகையில் விழுப்புரம் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் அலங்கார வளைவுகள், கட்–அவுட்டுகள், விளம்பர பதாகைகள் மற்றும் கட்சி கொடி தோரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
விழா முடிந்ததும் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு விழுப்புரம்– சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்திற்கு சென்று அங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.
பின்னர் அங்குள்ள கட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். அதன் பிறகு அவர் விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு சென்னை செல்கிறார்.
முதல்–அமைச்சர் வருகையையொட்டி விழுப்புரம் மாவட்டத்தில் அவர் வரும் வழியெங்கும் மற்றும் விழா நடைபெறும் இடத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த பாதுகாப்பு பணியில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீதர், பயிற்சி ஐ.ஜி. சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் மேற்பார்வையில் விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாலகிருஷ்ணன், காஞ்சீபுரம் போலீஸ் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி ஆகியோர் தலைமையில் போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஜெயக்குமார், கடலூர் விஜயகுமார் உள்பட 13 போலீஸ் சூப்பிரண்டுகள், 9 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 28 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 79 இன்ஸ்பெக்டர்கள், 190 சப்–இன்ஸ்பெக்டர்கள், ஆயுதப்படை போலீசார் 200 பேர், ஊர்காவல் படையினர் 210 பேர் உள்பட 1,500 போலீசார் ஈடுபட உள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விழா நடைபெறும் இடத்திற்கு போலீஸ் ஐ.ஜி.க்கள் ஸ்ரீதர், சண்முகராஜேஸ்வரன் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துமாறு போலீஸ் அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.