சேலம் அருகே 7–ம் வகுப்பு மாணவனை அடித்த அரசு பள்ளி ஆசிரியர் கைது
சேலம் அருகே, பள்ளிக்கு காலணி அணியாமல் வந்ததால் 7–ம் வகுப்பு மாணவனை அடித்த அரசு பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
கொண்டலாம்பட்டி,
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மகன் நந்தகுமார் (வயது 11). இவன் நெய்க்காரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தான். இந்த பள்ளியில் சேலம் சூரமங்கலம் சுப்பிரமணி நகரை சேர்ந்த ராஜேஷ் (44) என்பவர் பகுதிநேர ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 8–ந் தேதி ஆசிரியர் ராஜேஷ் பணியில் இருந்தபோது, மாணவன் நந்தகுமார் காலணி அணியாமல் பள்ளிக்கு வந்ததாகவும், இதனால் ஆசிரியர் அவனை கண்டித்து, அடித்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் காலில் காயம் அடைந்த நந்தகுமார் கொண்டலாம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் 5 ரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றான்.
இதுகுறித்து மாணவனின் தந்தை ராஜேந்திரன், ஆன்–லைனில் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு புகார் அனுப்பினார். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், அரசு பள்ளி ஆசிரியர் ராஜேஷை கைது செய்தனர்.