கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை


கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் கரும்பு விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 8 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-09T02:59:08+05:30)

கரும்பு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர்,

கரும்பு விவசாயிகள் அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழு இணை அமைப்பாளர் கிருஷ்ணன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கும். வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரையை அமல்படுத்துவோம் என தேர்தல் நேரத்தில் பா.ஜனதா வாக்குறுதி அளித்தது. ஆனால் பா.ஜனதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆகிறது. தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. விவசாயிகளுக்கு மத்தியஅரசு துரோகம் செய்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பா.ஜனதா ஆளும் மராட்டிய மாநிலத்தில் கடந்த 2016-ம் ஆண்டில் 4,390 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். பா.ஜனதா கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களிலும் விவசாயிகள் தற்கொலை அதிகமாக இருக்கிறது.

தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. கரும்புகளை அரவைக்காக அனுப்பி விட்டு நிலுவைத் தொகைக்காக விவசாயிகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்தியாவில் ரூ.21 ஆயிரம் கோடி கரும்புக்கான நிலுவைத் தொகை உள்ளது. தமிழகத்தில் ரூ.1,680 கோடி நிலுவைத்தொகை உள்ளது. கரும்பு உற்பத்தி செலவுக்கு ஏற்ப கரும்புக்கான விலை அறிவிக்கப்படவில்லை. கட்டுப்படியான விலை அறிவிக்கப்படாததும் விவசாயிகள் தற்கொலைக்கு காரணமாகும். இதை எதிர்த்து விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வேளாண்மை விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து விளை பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சர்க்கரை உற்பத்தியில் அன்னிய முதலீட்டை தடுத்து நிறுத்த வேண்டும். 2017-18-ம் ஆண்டு பருவ கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் விலையை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு தலா ரூ.2 கோடி வீதம் மத்தியஅரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் கூறியதாவது:-

2013-ம் ஆண்டு முதல் தமிழகஅரசு கரும்புக்கான ஆதார விலையை அறிவித்து வருகிறது. ஆனால் தனியார் சர்க்கரை ஆலைகள் இந்த ஆதார விலையை தர மறுக்கின்றன. 24 தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ.1,680 கோடி நிலுவைத் தொகை வைத்துள்ளது. 3 முறை முத்தரப்புக்கூட்டம் நடத்தியும் நிலுவைத் தொகையை கொடுக்கமாட்டோம் என்று தனியார் சர்க்கரை ஆலைகள் அறிவித்துவிட்டன. தனியார் சர்க்கரை ஆலைகள் மீது மாநிலஅரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து 4 ஆண்டு கால கரும்புக்கான நிலுவைத் தொகையை பெற்று தர வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தர வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை ரூ.255 கோடியே உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகளின் கடன் சுமை ரூ.2,500 கோடியை மாநிலஅரசு ஏற்று கொள்ள வேண்டும். 2017-18-ம் ஆண்டிற்கான கரும்புக்கான ஆதார விலையை தமிழகஅரசு அறிவிக்க வேண்டும். கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம் போன்ற திட்டங்களை மத்தியஅரசு முழுமையாக கைவிட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், நீர் ஒழுங்காற்றுக்குழுவை மத்தியஅரசு உடனே அமைக்க வேண்டும். வருகிற 14-ந் தேதி அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் பேரணி-ஆர்ப்பாட்டத்திற்கு கரும்பு விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்து பங்கேற்க உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாநில மாநாடு

முன்னதாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மாநில மாநாடு தஞ்சையில் நேற்று நடந்தது. மாநாட்டிற்கு மாநில தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் காசிநாதன், மாநில துணை தலைவர் ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கரும்பு விவசாயிகள் அகில இந்திய ஒருங்கிணைப்புக்குழு இணை அமைப்பாளர் கிருஷ்ணன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன், மாநில பொருளாளர் சின்னப்பா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் நிர்வாகிகள் சுப்பிரமணியன், சுந்தரமூர்த்தி, சாமி.நடராஜன், கண்ணன், பொன்னுசாமி, ராசைய்யன், பழனிசாமி, காமராஜ், நல்லாக்கவுண்டர், கோபிநாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story