சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் போலீசார் தேடுதல் வேட்டை


சிறையில் இருந்து கைதி தப்பி ஓட்டம் போலீசார் தேடுதல் வேட்டை
x
தினத்தந்தி 8 Aug 2017 11:15 PM GMT (Updated: 2017-08-09T03:18:19+05:30)

சேலம் அருகே சிறையில் இருந்து கைதி தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கலசமரத்துக்காடு கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23). இவர் கடந்த 5-ந் தேதி பிக்பாக்கெட் அடித்த வழக்கு ஒன்றில் மேச்சேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இவர் விசாரணைக்கு பிறகு ஓமலூரில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த சிறையில் கைதிகளை அடைத்து வைக்க 22 அறைகள் உள்ளன. தற்போது 24 பேர் இந்த சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். சிறை வளாகத்தை சுற்றி சுமார் 30 அடி உயரத்தில் சுற்றுச்சுவர் கட்டப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் நேற்று மதியம் வழக்கம்போல் கைதிகள் அனைவரும் மதிய உணவு சாப்பிட அழைக்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறைகளில் இருந்து வெளியே வந்து ஆங்காங்கே அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். சாமிதுரையும் ஒரு இடத்தில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது சாமிதுரை, தன்னுடைய உள்ளாடையை காய வைத்துவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு சென்றவர் வெகுநேரம் ஆகியும் திரும்பி வரவில்லை. இதற்கிடையில் கைதிகள் அனைவரும் சாப்பிட்ட பின்பு அவர்களது அறையில் அடைக்கப்பட்டனர். அப்போது சாமிதுரையை மட்டும் காணாததால் அதிர்ச்சி அடைந்த சிறைக்காவலர்கள் இதுகுறித்து சக கைதிகளிடம் கேட்டபோது, அவர் உள்ளாடையை காயவைத்து விட்டு வருவதாக கூறிச்சென்றது தெரியவந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சிறைக்காவலர்கள் சிறை வளாகத்தை சோதனையிட்டபோது சாமிதுரையை காணவில்லை. அவர் சிறையில் இருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. சிறை வளாகத்தின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதியில் நீளமான இரும்பு குழாய் ஒன்று கிடந்தது. அந்த குழாயை சுற்றுச்சுவரின் மீது சாயவைத்து அதை பிடித்து ஏறி சாமிதுரை சுற்றுச்சுவரை தாண்டிக்குதித்து தப்பிச்சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் ஓமலூர் கிளை சிறையில் இருந்து கைதி தப்பி ஓடியது குறித்து தகவல் அறிந்ததும், சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு ஆண்டாள் ஓமலூர் சிறைக்கு நேரில் சென்று அங்கு அடைக்கப்பட்டு இருந்த கைதிகள் மற்றும் சிறையின் தலைமை வார்டன் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டார்.

சிறையில் அடைக்கப்பட்டு இருந்த கைதி திடீரென தப்பிச்செல்ல முடியாது. எனவே அவர் ஏற்கனவே தப்பிச்செல்ல திட்டம் போட்டு இருக்கலாம் என்றும், அதற்கு தகுந்த நேரத்தை எதிர் பார்த்துக்கொண்டு இருந்து இருக்கலாம் என்றும், தற்போது சந்தர்ப்பம் கிடைத்ததும் அவர் தப்பிச்சென்று இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிறையில் இருந்தவர்கள் யாராவது உதவி செய்தார்களா? என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல அவர் தப்பிச்செல்ல இரும்பு குழாயை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் சிறையின் சுற்றுச்சுவர் அருகே இரும்பு குழாய் ஏன் வந்தது என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தப்பி ஓடிய கைதி சாமிதுரை பிடிக்க ஓமலூர் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிளை சிறையில் இருந்து கைதி ஒருவர் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Related Tags :
Next Story