பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற 8 பேர் கைது சகோதரனின் காதலுக்கு தூது சென்றதால் அவலம்


பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற 8 பேர் கைது சகோதரனின் காதலுக்கு தூது சென்றதால் அவலம்
x
தினத்தந்தி 8 Aug 2017 11:37 PM GMT (Updated: 8 Aug 2017 11:37 PM GMT)

மராட்டியத்தில் சகோதரனின் காதலுக்கு தூது சென்றதால், பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பீட்,

மராட்டிய மாநிலம் பீட் மாவட்டம் சக்லாம்பா கிராமத்தை சேர்ந்த 27 வயது பெண் திருமணமாகி தனது கணவருடன் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் சகோதரர் பக்கத்து கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்தார். இருவரும் வெவ்வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால், தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் தெரிவிக்க கூச்சப்பட்டதாக தெரிகிறது.

இந்தநிலையில், தன்னுடைய சகோதரனுக்காக அந்த பெண், இளம்பெண்ணிடம் ‘தூது’ சென்று காதலை சொல்லியதாக கூறப்படுகிறது. அதனை இளம்பெண்ணும் ஏற்றுக்கொண்டார். இந்தநிலையில், இந்த காதல் விவகாரம் இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவரவே, ஆத்திரம் அடைந்த அவர்கள், அந்த பெண்ணையும், அவரது கணவரையும் அழைத்து கண்டித்தனர்.

மேலும், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எச்சரித்தனர். இதைத்தொடர்ந்து, அந்த பெண் மன்னிப்பு கேட்டுவிட்டு வீடு திரும்பினார். இருப்பினும், சமாதானம் அடையாத இளம்பெண்ணின் குடும்பத்தினர், சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டுக்கு வந்தனர். அப்போது, அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

உடனே அவரை தர தரவென வெளியே இழுத்து வந்தனர். மேலும், அவரது ஆடைகளை அகற்றி, நிர்வாணப்படுத்தியதுடன் அவரை வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். தகாத வார்த்தைகளால் திட்டினர். இதனால், அந்த பெண் கூனி குறுகி போய் நின்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கணவர் வீடு திரும்பியதும், தனக்கு நேர்ந்த அவலத்தை கூறி கதறி அழுதார். இதனால், நொடிந்து போன அவர், இதுபற்றி போலிசில் புகார் செய்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற பாபன் ஆர்.சதாளே உள்ளிட்ட 8 பேரை கைது செய்தனர்.

பின்னர், அவர்கள் பீட் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அனைவரையும் போலீஸ் காவலில் ஒப்படைத்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.


Next Story