மணல் அள்ளிய லாரியை விடுவித்ததாக கூறி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்


மணல் அள்ளிய லாரியை விடுவித்ததாக கூறி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:45 AM IST (Updated: 10 Aug 2017 12:11 AM IST)
t-max-icont-min-icon

மணல் அள்ளிய லாரியை விடுவித்ததாக கூறி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தமபாளையம்,

உத்தமபாளையம் அருகே உள்ள கூடலூர், டி.மீனாட்சிபுரம், பொட்டிப்புரம், சிலமலை, சீலையம்பட்டி உள்ளிட்ட இடங்களில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுகிறது.

இந்தநிலையில் கம்பம் அருகே ஏகலூத்து செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக 9 லாரிகள், ஒரு பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை பிடித்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ஆனால் ஒரு மணி நேரத்திலேயே அனைத்து வாகனங்களும் விடுவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், ஒரு லாரிக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட மாணவரணி நிர்வாகி சுரேஷ் உள்பட 50–க்கும் மேற்பட்டோர் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள், அங்கு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அங்கு பணியில் இருந்த ஆர்.டி.ஓ.வின் நேர்முக உதவியாளர் அழகுமணியிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, தேவாரம், மீனாட்சிபுரம் ஆகிய இடங்களில் வாங்கிய அனுமதிசீட்டை பயன்படுத்தி கம்பத்தில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டது. 9 லாரிகளை பிடித்து கொடுத்ததில் ஒரு லாரிக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி மணல் அள்ளுவதை கனிமவளத்துறை மற்றும் வருவாய்த்துறையினர் தடுத்து நிறுத்துவதில்லை என்று குற்றம்சாட்டினர்.


Next Story