தவறான சிகிச்சையால் இறந்ததாக குற்றச்சாட்டு சிறுமியின் உடலை சாலையில் போட்டு போராட்டம்
காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூர் அடுத்த வடக்கு செய்யூரை சேர்ந்தவர் ராஜா. அவருடைய மகள் பூஜா (வயது 8). 3–ம் வகுப்பு படித்து வந்தாள்.
மதுராந்தகம்,
நேற்று பூஜாவுக்கு காய்ச்சலாக இருந்தது. அதனால், அவளை செய்யூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இந்நிலையில், நேற்று மாலை 4.45 மணிக்கு பூஜா திடீரென இறந்தாள். டாக்டர்களின் தவறான சிகிச்சையால் அவள் உயிரிழந்ததாக பெற்றோரும், உறவினர்களும் குற்றம் சாட்டினர்.
செய்யூர்–சித்தாமூர் சாலையில், செய்யூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு சிறுமியின் உடலை போட்டு போராட்டத்தில் குதித்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செய்யூர் தாசில்தார் ராமச்சந்திரன், மதுராந்தகம் டி.எஸ்.பி. ராஜேந்திரன், செய்யூர் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் ஆகியோர் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருப்பினும், தவறான சிகிச்சை அளித்த டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், செய்யூரிலேயே பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பெற்றோரும், உறவினர்களும் கோஷமிட்டனர். நள்ளிரவில், கொட்டும் மழையிலும் போராட்டம் நீடித்தது.