3 கொலை, வழிப்பறியில் தொடர்பு: குண்டர் தடுப்பு சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு

திருவள்ளூரை அடுத்த பட்டாபிராம், தண்டுரை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிசாமி (வயது 50), பூண்டு வியாபாரி.
திருவள்ளூர்,
கடந்த 16–6–2017 அன்று மோட்டார் சைக்கிளில் சென்ற மாரிசாமியை, திருமழிசை உடையவர்கோவில் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் (34) என்பவர் வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூ.3 ஆயிரத்தை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டார். இதுகுறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்ட ஆனந்தன் கடந்த 12–4–2016 அன்று திருமழிசையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி கருப்பன் என்கிற பலராமன் (55), கடந்த 28–4–2016 அன்று திருமழிசையைச் சேர்ந்த ஆனந்த் என்கின்ற பட்டு (45) ஆகியோரை தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. மேலும் கடந்த 31–12–2016 அன்று திருமழிசை பேரூராட்சி ஒப்பந்த தொழிலாளி பாஸ்கர் (45) என்பவரை வெட்டி படுகொலை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து ஆனந்தனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.ஆர்.சிபிசக்கரவர்த்தி, மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கே.முத்துவுக்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்றுக்கொண்ட கலெக்டர் நேற்று ஆனந்தனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவு நகலை போலீசார் சிறை அதிகாரிகளிடம் வழங்கினார்கள்.