ஈரோடு தாலுகா அலுவலகம் முன்பு வீட்டுமனை பட்டா கேட்டு பெண்கள் தர்ணா போராட்டம்
ஈரோடு அன்னை சத்யாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை கேட்டு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
ஈரோடு,
ஈரோடு அன்னை சத்யாநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனை கேட்டு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஈரோடு தாலுகா அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர். அவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–
அன்னை சத்யாநகரில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். அங்குள்ள குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. இதையடுத்து ஈரோடு பெருமாள்மலை அருகில் மாயபுரம் பகுதியில் வீட்டுமனை வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதிஅளித்தனர். ஆனால் அந்த பட்டாவை வழங்காமல் அதிகாரிகள் அலைக்கழிக்கிறார்கள். எனவே எங்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். அவர்களிடம் தாசில்தார் ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் பெண்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தாசில்தார் ஜெயக்குமார் கூறும்போது, ‘‘அன்னை சத்யாநகரில் உள்ள பொதுமக்களுக்கு பெருமாள்மலை அருகில் மாயபுரத்தில் வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த நிலம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. எனவே அவர்களுக்கு நிலத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.
குடிசை மாற்று வாரியம் சார்பில் சித்தோடு அருகே நல்லாகவுண்டன்பாளையத்தில் 2 ஆயிரத்து 400 வீடுகள் உடைய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வீடுகளை வாங்குவதற்கு மொத்தம் ரூ.40 ஆயிரத்தை 2 தவணைகளாக செலுத்த வேண்டும். இதில் ரூ.13 லட்சம் மதிப்பிலான வீடு வழங்கப்படுகிறது. எனவே இந்த வீடுகளை வாங்குவதற்கு விண்ணப்பிக்குமாறு அன்னை சத்யாநகரை சேர்ந்த பொதுமக்களுக்கு வேண்டுகோள் வைத்தோம். அவர்கள் விண்ணப்பிக்க தயாராக இருந்தால் அவர்களுக்கு வீடுகளை வழங்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்’’, என்றார்.