பழங்குடியினர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும்
நீலகிரி மாவட்டத்தில் பழங்குடியினர்களின் கலாசாரம், பாரம்பரியத்தை காப்பாற்ற வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா பேசினார்.
ஊட்டி,
ஆண்டுதோறும் ஆகஸ்டு 9–ந் தேதி உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள இந்திய மானுடவியல் ஆய்வு துறை தென்னிந்திய மையம், தமிழ்நாடு வனத்துறையின் சூழல் மேம்பாட்டு குழுக்கள் மற்றும் நீலகிரி பண்டைய பழங்குடியினர் கூட்டமைப்பு சார்பில், உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மைய இணை இயக்குனர் சத்திய நாராயணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
கடந்த 1993–ம் ஆண்டு ஆகஸ்டு 9–ந் தேதி உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தினமாக ஐ.நா. சபை அறிவித்தது. பூர்வீக குடிகள் என்பது வடஅமெரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு பொருந்தும். அதன்படி, ஒவ்வொரு ஆண்டு அந்த தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 7½ லட்சம் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர். குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31 ஆயிரம் பழங்குடியினர்கள் வசித்து வருகின்றனர். மாவட்டத்தில் அவர்களின் மக்கள் தொகை 12 சதவீதம் குறைந்து உள்ளது. இதற்கு காரணம் அவர்களுக்கு வேலைவாய்ப்பு, கல்வி, அடிப்படை வசதிகள், சொந்த நிலங்கள் போன்றவை இல்லாததால் இடம் பெயர்ந்து செல்வதே ஆகும். ஆகவே, பழங்குடியினர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா கலந்துகொண்டு பேசியதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், தோடர், குரும்பர், பனியர், இருளர், காட்டுநாயக்கர் ஆகிய 6 வகையை சேர்ந்த பழங்குடியினர்கள் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு பாதுகாப்பாக காவல்துறை விளங்கி வருகிறது. இந்தியாவில் பழங்காலத்தில் 7 ஆயிரம் மொழிகளும், 5 ஆயிரம் கலாசாரங்களும் இருந்தன. பின்னர் நாளடைவில் அவை அழிய தொடங்கி விட்டன.
நீலகிரி மாவட்டத்தில் வசித்து வரும் பழங்குடியினர்களின் கலாசாரம், பாரம்பரியம், உரிமை காப்பாற்றப்பட வேண்டும். மேலும் பழங்குடியினர்கள் அடிப்படை கல்வியை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். காடுகள் பாதுகாப்பாக இருக்கிறது என்றால், அது பழங்குடியினர்களின் வாழ்க்கை முறையே ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பழங்குடியினர்களுக்கு வனவிலங்குகளால் ஏற்படும் ஆபத்துகள், சாலை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து அரசு அதிகாரிகள் முன்னிலையில் விவாதிக்கப்பட்டது. விழாவில் மாவட்ட சிவில் நீதிபதி சுரேஷ்குமார், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் சீனிவாச ரெட்டி, கோவை மண்டல வன பாதுகாப்பு அலுவலர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதில் பழங்குடியினர்கள் உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.