குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி நகை–பணம் திருட்டு
குடிக்க தண்ணீர் கேட்பதுபோல் நடித்து வீட்டில் தனியாக இருந்த பெண்ணை ஏமாற்றி நகை–பணத்தை திருடி சென்ற 4 பெண்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி,
திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மாநகரை சேர்ந்தவர் மாதவன். இவர் துப்பாக்கி தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ராதிகா. இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவரது வீட்டுக்கு கைக்குழந்தையுடன் 4 பெண்கள் வந்தனர். அவர்கள் ராதிகா வீட்டின் கதவை தட்டினர். சத்தம் கேட்டு அவர் வெளியே வந்து பார்த்தார். அப்போது அந்த பெண்கள் தங்களுக்கு தாகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டனர். அவர்கள் கைக்குழந்தையுடன் நின்றதை பார்த்த ராதிகா இரக்கப்பட்டு தண்ணீர் எடுக்க வீட்டுக்குள் சென்றார்.
அந்த சமயம் 4 பெண்களில் ஒருவர் ராதிகாவுக்கு தெரியாமல் நைசாக வீட்டுக்குள் புகுந்து, பீரோவில் இருந்த 11¼ பவுன் தங்க நகைகள், ரூ.80 ஆயிரத்தை திருடிக்கொண்டு வெளியே வந்துவிட்டார். அதன்பிறகு ராதிகாவிடம் தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு 4 பெண்களும் ஒன்றுமே தெரியாதது போல் அங்கிருந்து சென்று விட்டனர். சிறிதுநேரம் கழித்து ராதிகா வீட்டின் பீரோவை திறந்து பார்த்தபோது, அங்கு நகை மற்றும் பணம் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக இது குறித்து அவர் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து நகை, பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பி ஓடிய 4 பெண்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.