தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
தா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
தா.பேட்டை,
தா.பேட்டையை அடுத்துள்ள கலிங்கப்பட்டி கிராமத்தில் வறட்சி காரணமாக குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு சில ஆழ்குழாய் மோட்டார் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் போதுமானதாக இல்லை. குடிநீர் பற்றாக்குறை குறித்து தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் துறையூர்–நாமக்கல் மெயின் சாலையில் மகாதேவி கைக்காட்டி என்ற இடத்தில் காலிகுடங்களுடன் பொதுமக்கள் நேற்று சாலை மறியல் செய்தனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நின்றன. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தா.பேட்டை ஒன்றிய ஆணையர்கள் மற்றும் போலீசார் குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். அதனை ஏற்க மறுத்த பொதுமக்கள் உடன் குடிநீர் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு அதிகாரிகள் 10 நாட்களுக்குள் உரிய ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.