வறட்சி நிவாரணம் வழங்கக்கோரி வருகிற 17–ந்தேதி அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் பேரணி– ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 17–ந்தேதி அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் சார்பில் பேரணி– ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கடலூர்,
கடலூர் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சூரப்பநாயக்கன் சாவடியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தி.மு.க. மாவட்ட அவை தலைவர் தங்கராசு தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன், அகில இந்திய விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.எம்.சேகர், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாய சங்க தலைவர் விஜயகுமார், பாசிமுத்தான் ஓடை விவசாய சங்க தலைவர் ரவீந்திரன், வீராணம் ஏரி பாசன விவசாய சங்க தலைவர் இளங்கீரன், காங்கிரஸ் கட்சி விவசாய பிரிவு பாண்டுரங்கன், தி.மு.க. நகர செயலாளர் ராஜா, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி, கான்சாகிப் வாய்க்கால் பாசன விவசாய சங்க செயலாளர் கண்ணன் மற்றும் விவசாய சங்க தலைவர்கள் கலந்து கொண்டு பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
கூட்டத்தில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சியினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு கேட்ட நிவாரண தொகையை மத்திய அரசு வழங்கவில்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதை வன்மையாக கண்டிப்பது,
வறட்சியால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய,கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய பயிர்க்கடனை வழங்க வேண்டும். முந்திரி, பலா விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ.300 கோடி நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். 2016–2017 பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.10 கோடி மட்டுமே வழங்கி உள்ளது. மாவட்ட நிர்வாகம் கேட்ட ரூ.160 கோடியே ஒரே தவணையில் வழங்க வேண்டும்.
கடலூர் மாவட்டத்தை பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்ததை கண்டிப்பது, மக்கள் கருத்தை அறிந்து இந்த திட்டத்தை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாய சங்க நிர்வாகிகள் சார்பில் வருகிற 17–ந்தேதி (வியாழக்கிழமை) கடலூர் உழவர் சந்தையில் இருந்து பேரணியாக சென்று மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.