தீமிதி திருவிழா பிரச்சினையில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகை


தீமிதி திருவிழா பிரச்சினையில் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறி போலீஸ் நிலையத்தை முற்றுகை
x
தினத்தந்தி 10 Aug 2017 4:30 AM IST (Updated: 10 Aug 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

கோவில் தீமிதி திருவிழா பிரச்சினையில் ஒருதலைபட்சமாக செயல்பட்ட போலீசாரை கண்டித்து பெரம்பூர் போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது 10-க்கும் மேற்பட்டோர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

குத்தாலம்,

நாகை மாவட்டம், குத்தாலம் அருகே வாளவராயன்குப்பத்தில் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் பகுதியில் செல்லமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் தீமிதி திருவிழாவிற்கு கரகம் எடுத்து செல்வது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுதொடர்பாக குத்தாலம் தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 19-ந் தேதி அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 30-ந் தேதி செல்லமுத்து மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. அப்போது வன்முறையில் ஈடுபட்டதாக கூறி ஒரு சமூகத்தினர் மீது பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை வழக்கில் தொடர்புடையவர்களின் உறவினர்கள் 3 பேரை பெரம்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் அங்கு சென்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கோவில் தீமிதி திருவிழா பிரச்சினையில் போலீசார் ஒருதலைபட்சமாக செயல்பட்டதாக கூறி கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையில் பெண்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் திடீரென அவர்களது உடலில் மண்எண்ணெய்யை ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றனர். உடனே அவர்களை, அங்கு இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது மயங்கி விழுந்த 6 பேர் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான், மேற்கண்ட பகுதிக்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 3 பேரும் வழக்குப்பதிவு இன்றி விடுவிக்கப்பட்டனர். பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

Related Tags :
Next Story