திருக்காட்டுப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


திருக்காட்டுப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Aug 2017 3:33 AM IST (Updated: 10 Aug 2017 3:33 AM IST)
t-max-icont-min-icon

திருக்காட்டுப்பள்ளி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருக்காட்டுப்பளளி,

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே அலமேலுபுரம் பூண்டியில் ஆதிதிராவிடர் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள அனைத்து கைபம்புகளிலும் தண்ணீர் வருவதில்லை. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் குடிநீர் கேட்டு நேற்று காலை காலிக்குடங்களுடன் செங்கரையூர் – திருக்காட்டுப்பள்ளி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா, பூதலூர் தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அதிகாரி காந்தரூபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அலமேலுபுரம் பூண்டி ஆதிதிராவிடர் தெருவிற்கு உடனடியாக டேங்கர் லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், உடனடியாக புதிய ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதியளித்தார். இதை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் இந்த பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story