சிறுமி பாலியல் பலாத்காரம்: வியாபாரிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை


சிறுமி பாலியல் பலாத்காரம்: வியாபாரிக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை
x
தினத்தந்தி 10 Aug 2017 3:41 AM IST (Updated: 10 Aug 2017 3:41 AM IST)
t-max-icont-min-icon

படிக்க வைப்பதாக கூறி சிறுமியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்த வியாபாரிக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிக்கமகளூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு டவுன் சரீப் தெருவை சேர்ந்தவர் இம்ரான் (வயது 22). வியாபாரி. இவருக்கும் அதேப்பகுதியை சேர்ந்த 15–வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அந்த சிறுமி அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தாள்.

சிறுமியின் பெற்றோர் ஏழ்மை நிலையை காரணம் காட்டி அவளது படிப்பை பாதியில் நிறுத்தியதாக தெரிகிறது. இதனால் சிறுமி மனவருத்தத்தில் இருந்து வந்தாள். மேலும் சிறுமி தனது பெற்றோர் பள்ளி படிப்பை நிறுத்தியது பற்றி இம்ரானிடம் கூறினாள்.

அப்போது இம்ரான், சிறுமியிடம் நான் உன்னை படிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் அந்த சிறுமியிடம், இம்ரான் உன்னை ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா தாலுகா சரவணபெலகோலாவில் உள்ள பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த சிறுமியிடம், இம்ரான் நான் உன்னை இன்று சரவணபெலகோலாவில் உள்ள பள்ளிக்கு அழைத்து சென்று சேர்த்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த சிறுமி, தனது பெற்றோரிடம் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு, இம்ரானுடன் சரவணபெலகோலாவுக்கு சென்றுவிட்டாள்.

அங்கு சென்றதும் சிறுமியை ஒரு வீட்டிற்கு அழைத்து சென்ற இம்ரான், அங்கு வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. இந்த நிலையில் வெளியே சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு சென்ற தனது மகள் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், சிறுமியை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமி கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், எனது மகள் மாயமாகி விட்டாள். அவளை கண்டுபிடித்து தரவேண்டும் என்று சிக்கமகளூரு டவுன் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் சிறுமியை போலீசார் தேடினர். அப்போது இம்ரான் சிறுமியை, படிக்க வைப்பதாக கூறி சரவணபெலகோலாவுக்கு அழைத்து சென்றது தெரியவந்தது.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் குறிப்பிட்ட அந்த வீட்டிற்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு சிறுமியும், இம்ரானும் இருந்தனர். அந்த சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது, படிக்க வைப்பதாக கூறி அழைத்து வந்து இம்ரான் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினாள். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2015–ம் ஆண்டு மே மாதம் 12–ந் தேதி நடந்தது.

2 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதில் குற்றம்சாட்டப்பட்ட இம்ரானுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 2 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.

Next Story