இரையாக வந்த ஆடு, புலியின் நண்பனான கதை!
புலியும், ஆடும் ஒன்றாக நடை பயில்கின்றன. ஒன்றாக விளையாடுகின்றன. ஒன்றாக ஓய்வெடுக்கின்றன.
ரஷியாவில் உள்ள பிரைமோர்ஸ்கி சபாரி பூங்காவில் வசிக்கிறது அமுர் என்ற 3 வயது சைபீரியப் புலி. பூங்கா ஊழியர்கள் புலிக்கு வாரம் இருமுறை முயல்களையும், ஆடுகளையும் வெட்டி, இறைச்சியை புலியின் கூண்டில் வைத்துவிடுவார்கள்.
ஆனால் கடந்த மாதம் புலியின் உணவுக்காக டிமுர் என்ற ஆட்டை உயிருடன் கூண்டுக்குள் அனுப்பி வைத்தனர். மறுநாள் ஆடு உயிருடன் இருக்கப் போவதில்லை என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக இரண்டும் நண்பர்களாகிவிட்டன.
‘‘புலியும், ஆடும் ஒன்றாக நடை பயில்கின்றன. ஒன்றாக விளையாடுகின்றன. ஒன்றாக ஓய்வெடுக்கின்றன. புலியையும், ஆட்டையும் வேறு வேறு கூண்டுக்குள் அனுப்பிவைக்க முயன்றோம். புலி இடத்தைவிட்டு நகர மறுத்தது. ஆடு தூங்காமல், சாப்பிடாமல் அடம்பிடித்தது. மறுநாள் ஒரே கூண்டில்விட்ட பிறகுதான் ஆடும், புலியும் இயல்பு நிலைக்கு வந்தன. மீண்டும் நட்பைத் தொடர்ந்தன. ஒன்றரை மாதங்களுக்குப் பிறகும் நட்பு நீடிக்கிறது’’ என்கிறார் பூங்கா அதிகாரி.
‘‘ஆடு, புலியின் கூடாநட்பு நீண்ட நாட்கள் நிலைக்காது. எப்போது புலிக்குப் பசி எடுக்கிறதோ, அன்று ஆடு பலியாகிவிடும். விரைவில் இது நடக்கும்’’ என்கிறார் பூங்கா ஒருங்கிணைப்பாளர் விளாடிமிர் க்ரெவெர்.
புலியும் ஆடும் தலையால் முட்டிமோதிக்கொண்டு, தண்ணீர் பருகும் காட்சியை உலகில் வேறு எங்கும் பார்த்திருக்க முடியுமா..!
Related Tags :
Next Story