ஓசூரில் மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்


ஓசூரில் மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:15 AM IST (Updated: 11 Aug 2017 2:54 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் மதுக்கடைகளை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தாலுகா அலுவலக சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள் அமைந்துள்ள பகுதியானது, ஓசூர் நகரின் மிக முக்கிய பகுதியாக விளங்கி வருவதுடன், நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சாலையாகவும் உள்ளது,

மேலும் இந்த பகுதியை சுற்றி கோவில்கள், கடைகள், பள்ளிக்கூடங்களும் உள்ளன. இந்த நிலையில் 2 மதுபான கடைகளும் இங்கு அமைந்திருப்பதால், மாலை நேரங்களில் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், அரசியல் கட்சியினரும், இந்த மதுக்கடைகளை அங்கிருந்து அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள்.

ஆர்ப்பாட்டம்

இந்த நிலையில், ஓசூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கம் மற்றும் தாலுகா அலுவலக சாலை வியாபாரிகள் சங்கம் ஆகியவற்றின் சார்பில், 2 மதுக்கடைகளையும் அகற்ற வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓசூர் காமராஜ் காலனி 2-வது குறுக்குத்தெருவில் உள்ள ஆட்டோ நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து குடியிருப்போர் நல சங்க தலைவர் துரை தலைமை தாங்கினார்.

இதில், ஓசூர் ஹோஸ்டியா சங்க தலைவர் ஞானசேகரன், கிரிடிஸ்டியா சங்க தலைவர் ராமலிங்கம், அரிமா சங்க நி்ர்வாகி ஒய்.வி.எஸ்.ரெட்டி, வியாபாரிகள் சங்க தலைவர் சரவணன், சீனிவாசுலு உள்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்ட நிகழ்ச்சிக்கு பிறகு, கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓசூர் தாசில்தார் பூஷன்குமாரிடம் மனு வழங்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், தாலுகா அலுவலக சாலையில், நேற்று மதியம் வரை பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. 

Next Story