பெரம்பலூர் அருகே விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி


பெரம்பலூர் அருகே விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி
x
தினத்தந்தி 11 Aug 2017 4:00 AM IST (Updated: 11 Aug 2017 2:59 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் அருகே விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் அரசு பஸ் ஜப்தி

பெரம்பலூர்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள எம்.கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 45). விவசாயி. இவர் கடந்த 2013-ம் ஆண்டு அரசு பஸ்சில் பயணம் செய்தார். அப்போது சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆற்றுப்பாலம் என்ற இடத்தில் சிவக்குமார் பயணம் செய்த பஸ் மற்றொரு பஸ்சுடன் உரசி விபத்துக்கு உள்ளாகியது. இதில் கையில் பலமாக அடிபட்டு வேலை செய்ய முடியாமல் போன சிவக்குமார் இழப்பீடு கேட்டு பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சிவக்குமாருக்கு ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவுபடி அரசுப்போக்குவரத்து கழகம் கடந்த ஒன்றரை வருடமாக இழப்பீடு வழங்கவில்லை. இதையடுத்து சிவக்குமார் பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் அடிப்படையில் அசல் மற்றும் வட்டியுடன் சேர்த்து ரூ.9 லட்சத்து 70 ஆயிரத்து 404-ஐ வழங்கவும், சேலம் கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்யவும் நீதிபதி பாலராஜமாணிக்கம் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து நீதிமன்ற அமீனா பெரம்பலூர் புதிய பஸ்நிலையத்திற்கு சென்று, அங்கு நாமக்கல்லில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக வந்த சேலம் கோட்டத்திற்கு சொந்தமான அரசு பஸ்சை ஜப்தி செய்து மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்கு இயக்கி வந்தார். 

Related Tags :
Next Story