சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக கணபதி ஹோமம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக கணபதி ஹோமம்
x
தினத்தந்தி 11 Aug 2017 4:00 AM IST (Updated: 11 Aug 2017 3:01 AM IST)
t-max-icont-min-icon

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் நேற்று கணபதி ஹோமம் நடைபெற்றது.

சமயபுரம்,

மழை பெய்யாததால் கடும் வறட்சி ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் குடிநீருக்கே மக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை நீங்கவும், மழை பெய்ய வேண்டியும், மக்கள் செல்வ செழிப்போடு வாழவும், மேலும் உலக நன்மைக்காகவும் சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று கணபதி ஹோமம் நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பு நடைபெற்ற இந்த ஹோமத்தில் ரோஜா மொட்டு, செண்பக மொட்டு உள்ளிட்ட 96 வகையான பொருட்கள் ஹோமத்தில் போடப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. விக்னேஷ்வர பூஜையை தொடர்ந்து, விநாயகருக்கு பால், பன்னீர், மஞ்சள் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மேலும் கும்ப அபிஷேகத்தையும் கோவில் அர்ச்சகர்கள் செய்தனர். மாலையில் சப்தசதி ஸ்லோகங்கள் எனப்படும் 700 ஸ்லோகங்கள் கோவில் அர்ச்சகர்களால் சொல்லப்பட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு கோவிலில் சண்டி ஹோமம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது. 

Related Tags :
Next Story