தினகரனுக்கு எதிராக எடப்பாடி அணி தீர்மானம்: ‘‘பாதி வந்துவிட்டார்கள்: மீதி வரட்டும்’’ ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதன் மூலம் பாதி வந்துவிட்டார்கள் என்றும், மீதி வரட்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
ஆலந்தூர்,
முன்னாள் முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நேற்று டெல்லி செல்லும் வழியில் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘டெல்லியில் துணை ஜனாதிபதி பதவி பிரமாண விழாவில் கலந்துகொள்ள அழைப்பு வந்து உள்ளது. அந்த அழைப்பை ஏற்று டெல்லி செல்கிறேன்’’ என்றார்.
மேலும் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– சசிகலா குடும்பத்தினரை ஒதுக்கி வைக்க வேண்டும் என கோரி இருந்தீர்கள். ஆனால் தற்போது டி.டி.வி.தினகரன் நியமனம் செய்த அறிவிப்புகள் செல்லாது என முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி தீர்மானம் நிறைவேற்றி உள்ளதே?
பதில்:– கடந்த 6 மாதங்களுக்கு முன் நாங்கள் தொடங்கிய தர்மயுத்தத்தின் போது சொல்லப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் அவர்கள் கருத்துகளை அறிக்கையின் மூலம் தீர்மானமாக கொண்டு வந்து உள்ளார்கள். பாதி வந்து உள்ளார்கள். மீதி வரட்டும். அதன் பின்னர் எங்கள் நிலைப்பாட்டை தெரிவிக்கிறோம்.
கேள்வி:– நீங்கள் அறிவித்த 2 பிரதான கோரிக்கைகளை ஏற்றால்தான் இணைப்புக்கு சாத்தியமா?
பதில்:– ஏற்கனவே நாங்கள் எங்கள் முடிவை சொல்லிவிட்டோம். எங்கள் நிலைப்பாட்டில் எந்தவித மாறுதலும் கிடையாது.
கேள்வி:– டெல்லிக்கு செல்லும் நீங்கள் எடப்பாடி பழனிசாமியுடன் பேச வாய்ப்பு இருக்குமா?
பதில்:– இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக இல்லை.
கேள்வி:– பதவி ஆசைக்காக தான் நாடகம் ஆடுகிறார்கள் என்று தஞ்சாவூரில் டி.டி.வி.தினகரன் கூறி உள்ளாரே?
பதில்:– யார் நாடகம் ஆடுகிறார்கள்?
கேள்வி:– எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்களை கூறி இருக்கிறார்?
பதில்:– அவர்களைத்தான் கூறி இருக்கிறார். எங்களை எதுவும் கூறவில்லையே.
கேள்வி:– தலைவர்கள் பேசவேண்டும். இரு அணிகளும் இணைய வேண்டும் என தொண்டர்கள் விருப்பப்படுகிறார்கள். உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்:– இரு அணிகளும் இணைந்தால் அது, தமிழக மக்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையிலேயேதான் இருக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
கேள்வி:– இரு அணிகள் இணைவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா?
பதில்:– இணைப்புகளுக்கான வாய்ப்பு இருந்தால் முதலில் உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.