ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 டன் செம்மரக்கட்டைகள் சிக்கின வாலிபர் கைது
ஊத்துக்கோட்டை அருகே ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 டன் எடையுள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள காசிரெட்டிபேட்டை பகுதியில் பென்னாலூர்பேட்டை சப்–இன்ஸ்பெக்டர்கள் பத்மஸ்ரீபபி, கலையரசி மற்றும் போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி ஜீப் மற்றும் கார் வேகமாக வந்தது.
போலீசாரை கண்டதும் டிரைவர் ஜீப்பை சாலை ஓரமாக நிறுத்தி விட்டு தப்பிச்சென்று விட்டார். அவருடன் இருந்த மற்ற 2 நபர்களும் தப்பிச்சென்று விட்டனர். ஜீப்பை தொடர்ந்து காரில் வந்தவர் பிடிபட்டார். பின்னர் போலீசார் ஜீப்பில் சோதனை செய்தனர். அதில் 2 டன் எடையுள்ள 4 அடி உயரம் கொண்ட 39 செம்மரக்கட்டைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
கைதுகாரில் வந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பிடிபட்ட அவர் வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தாலுகா வீராமுத்தூர் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் (வயது 28) என்பது தெரியவந்தது. ஜீப்பில் இருந்து தப்பி ஓடியவர்கள் சென்னை போரூரை சேர்ந்த குமார் (30), சுரேஷ் (30), வேலூரை சேர்ந்த சூரி (35) என்பது தெரியவந்தது.
ஆந்திராவில் உள்ள புத்தூரில் இருந்து சென்னைக்கு செம்மரக்கட்டைகள் கடத்த முயற்சி செய்தது தெரியவந்தது. போலீசார் ராஜேஷை கைது செய்து ஜீப் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.