1,925 அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி தேர்வு


1,925 அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி தேர்வு
x
தினத்தந்தி 11 Aug 2017 5:26 AM IST (Updated: 11 Aug 2017 5:26 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,925 அங்கன்வாடி பணியாளர்கள் காலி பணியிடங்களுக்கு வருகிற 24–ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறியுள்ளார்.

திருவண்ணாமலை,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்கீழ் செயல்படும் அங்கன்வாடி மையங்களில் 763 அங்கன்வாடி பணியாளர், 241 குறுமைய அங்கன்வாடி பணியாளர், 921 உதவியாளர் என மொத்தம் 1,925 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் அந்தந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். எனவே, இந்த பணியிடங்களுக்கு உரிய தகுதியுள்ளவர்கள், தங்களுடைய விண்ணப்பங்களை வருகிற 24–ந் தேதிக்குள் சம்பந்தப்பட்ட குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் போது, அதற்கான ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். தகுதியுள்ள நபர்களுக்கு 28–ந் தேதி மற்றும் 29–ந் தேதிகளில் முதன்மை அங்கன்வாடி பணியாளர்களுக்கும், குறு அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கும், 30–ந் தேதி அங்கன்வாடி உதவியாளர்கள் பணியாளர்களுக்கும் நேர்முகத் தேர்வு திருவண்ணாமலையில் நடைபெற உள்ளது.

அங்கன்வாடி மையத்திற்கு தேர்வு செய்யப்படுவோர் காலி பணியிடம் உள்ள கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். தகுதியுள்ள நபர் சம்பந்தப்பட்ட கிராமத்தில் இல்லாவிட்டால் அந்த ஊராட்சிக்கு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். எனவே, விண்ணப்பதாரர்கள் வசிப்பிட ஆதாரமாக வாக்காளர் அடையாள அட்டை, வீட்டு வரி ரசீது, ரே‌ஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பங்களையும், இதன் தொடர்பான கூடுதல் விவரங்களையும் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பபடிவங்கள் http://www.tiruvannamalai.nic.in என்ற இணையதள முகவரியில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு இதில் கூறப்பட்டுள்ளது.


Next Story