முதுமலை வனப்பகுதிகளில் மாவோயிஸ்டு தேடுதல் வேட்டை
கேரள மாநிலம் வயநாடு வனபகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மசினகுடி,
கேரள மாநிலம் வயநாடு வனபகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியை ஒட்டி முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதி உள்ளதால் மாவோயிஸ்டுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இதனால் நீலகிரி மாவட்ட காவல்துறையினர் தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக வனபகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உள்ள மண்டகரை முதல் போஸ்பரா வரை உள்ள வனப்பகுதிகளில் நேற்று மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை நடைபெற்றது. மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் முருகேசன், மசினகுடி காவல்துறை தனி பிரிவு சப்–இன்ஸ்பெக்டர் விஜயன், நக்சல் தடுப்பு பிரிவு போலீஸ்காரர் மகேஷ் ஆகியோர் தலைமையில் தேடுதல் வேட்டை நடந்தது. இதில் மாவோயிஸ்டுகள் நடமாட்டத்திற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. பின்னர் அவர்கள் போஸ்பரா மற்றும் அதன் சுற்றுவட்டாரா பகுதிகளில் உள்ள ஆதிவாசி மக்களை சந்தித்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை அளித்தனர்.
இதே போல் பர்லியார், சேம்பக்கரை வனப்பகுதிகளில் உள்ள ஆதிவாசி கிராமங்களிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருக்கிறதா? என்று தேடுதல் வேட்டை நடைபெற்றது. ஆதிவாசி மக்களிடம் சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.