கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நோய் தாக்குதலால் வெட்டப்படும் தென்னை மரங்கள்
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.
கம்பம்,
கம்பம் பள்ளத்தாக்கு பகுதியான கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி, காமயகவுண்டன் பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட இடங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆரம்பகாலத்தில் லாபம் தரும் தொழிலாக தென்னை விவசாயம் இருந்தது.
ஆனால் தற்போது பருவமழை பொய்த்து போய் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் தென்னை மரங்கள் கருகி வருகின்றன. இதுமட்டுமின்றி வாடல் நோய் தாக்குதலால் தென்னை மரங்கள் வீழ்ந்த வண்ணம் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக கம்பம், கூடலூர், ஆங்கூர்பாளையம், காமயகவுண்டன்பட்டி ஆகிய பகுதிகளில் தென்னை மரங்களில் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளது.
20 முதல் 25 ஆண்டுகளுக்கு மேலான தென்னை மரங்களை மட்டுமே இந்த நோய் தாக்குகிறது. நோய் தாக்குதலுக்கு ஆளான தென்னை மரங்களில் மட்டையின் அடிப்பகுதி பழுத்து தோகைகள், மஞ்சள் நிறமாகி விடுகிறது. படிப்படியாக ஒவ்வொரு ஓலையாக உதிர்ந்து மரம் மொட்டையாகி கருகி விடுகிறது.
இந்த நோய் தாக்குதலுக்கு ஆளான மரங்களை பாதுகாக்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இதனால் வேறு வழியின்றி தென்னை மரங்களை வெட்டும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில், வீழ்ச்சியை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் தென்னை விவசாயத்தை மீட்டெடுக்க தோட்டக்கலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.