எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை “ஜெயலலிதா வகுத்த வழியில் இருந்து விலகினால் ஆட்சிக்கு பிரச்சினை வரும்


எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் எச்சரிக்கை “ஜெயலலிதா வகுத்த வழியில் இருந்து விலகினால் ஆட்சிக்கு பிரச்சினை வரும்
x
தினத்தந்தி 12 Aug 2017 12:00 AM GMT (Updated: 11 Aug 2017 7:25 PM GMT)

ஜெயலலிதா வகுத்த வழியில் இருந்து விலகி சென்றால் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு பிரச்சினை வரும் என்று, தஞ்சையில் டி.டி.வி.தினகரன் கூறினார்.

தஞ்சாவூர்,

அ.தி.மு.க.(அம்மா) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நம்பிக்கை இல்லா தீர்மானம்

எம்.ஜி.ஆர். முதல்-அமைச்சராக இருந்தபோது ஒவ்வொரு சட்டசபை கூட்டத்தொடர் முடிந்தவுடன் கருணாநிதி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்வார். அவர் வழியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்கிறார்.

அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும். ஒரு வேளை அவர் கொண்டு வந்தால் அந்த வேளையில் அதை பற்றி சிந்திப்போம்.
அ.தி.மு.க. என்ற இந்த இயக்கம் தமிழகத்தில் தலை சிறந்த இயக்கமாக இருக்க என்னென்ன தேவையோ அதை எல்லாம் நிச்சயம் செய்வோம். அதற்காக தான் பொதுச் செயலாளர் சசிகலா என்னை துணை பொதுச் செயலாளராக நியமித்து கட்சியில் உள்ள பொறுப்பாளர்கள், தொண்டர்களுடன் இணைந்து இந்த இயக்கத்தை ஜெயலலிதா சொன்ன இலக்கை நோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்று சசிகலா ஆணையிட்டுள்ளார். அதில் எள்ளளவும் மாறாமல் இயக்கம் தமிழகத்தில் சிறப்பாக வளருவதற்கு என்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வேன்.

பொறுப்பற்ற பேச்சு

அ.தி.மு.க.வை யாராலும் ஆட்டவோ, அசைக்கவோ முடியாது என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொல்லி இருக்கிறார். இந்த இயக்கத்தை கட்டி காக்க வேண்டிய பொறுப்பான இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.
யாரோ பொறுப்பற்ற முறையில் ஏதாவது சொன்னால் அதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல முடியாது.

துணிச்சல்

இயக்கம் சிறப்பாக இருப்பதற்கு எந்தவொரு நடவடிக்கையும், வருங்கால இயக்கத்தின் வளர்ச்சியை முன்னிட்டு நிச்சயம் துணிச்சலோடு செய்வேன். இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற சில சகோதரர்கள், முன்னாள் நண்பர்கள் பயத்திலோ, நிர்பந்தத்திலோ ஏதாவது சொல்வார்கள். இதை எல்லாம் தாங்கி, இதற்கு மேலும் பொறுமையாக இருந்து இயக்கத்தை வழி நடத்தி செல்ல வேண்டிய பொறுப்பும், பதவியும் எங்களிடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் அதை எல்லாம் அனுசரித்து அதே நேரத்தில் மிகவும் சரியான நடவடிக்கைகளை, தீர்க்கமான நடவடிக்கைகளை நிச்சயம் எந்த பயமும் இல்லாமல் தேவைப் படும்போது எடுப்பேன்.
அ.தி.மு.க. வருங்காலத்தில் சிறப்பாக இருக்க எந்த ஒரு தேவையையும், எந்தவித அறுவை சிகிச்சையையும் செய்வேன்.
ஜெயலலிதா வகுத்த வழியில் இருந்து விலகினால் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

தடம் மாறினால்

தண்டவாளத்தில் ரெயில் சரியாக போகும் வரை எந்த பிரச்சினையும் வராது. தண்டவாளத்தில் இருந்து தடம் மாறினால் பிரச்சினை தான் வரும். 5 ஆண்டுகள் ஆட்சி நீடிக்குமா? என்பதை நீங்கள் முதல்-அமைச்சரிடமும், அமைச்சர்களிடமும் கேட்க வேண்டும். நான் ஆட்சி பொறுப்பில் இல்லை. நான் கட்சியை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கிறேன்.
சரியாக தண்டவாளத்தில் ரெயில் செல்கிறதா? என ரெயிலில் டிரைவராக உட்கார்ந்து இருப்பவரிடம் கேட்க வேண்டும்.

பொதுக்குழு

பொதுக்குழுவை தனியாக கூட்டினால் அவசியம் உங்களுக்கு சொல்வேன். பொதுக்குழுவை கூட்ட வேண்டிய தேவையில்லை. ஒருவரை பதவியில் இருந்து நீக்க பொதுச் செயலாளர் சசிகலா எனக்கு முழு அதிகாரமும் கொடுத்து இருக்கிறார். அமைச்சர்களாக இருப்பவர்கள் எல்லோருமே எங்கள் ஆதரவாளர்கள் தான். அவர் களில் சிலர் இல்லை என்று சொல்லலாம்.
அவர்களின் முதுகிற்கு பின்னால் கத்தியும், துப்பாக்கியும் வைத்து இருப்பதால் அந்த பயத்தினால் வர முடியவில்லை என்று எம்.எல்.ஏ.க்களும், அமைச்சர்களும் என்னிடம் தெரிவித்துள்ளனர். இங்கே வந்தவர்களை விட வர முடியவில்லை என்று தொலைபேசியில் பேசியவர்கள் அதிகம்.

இன்றைக்கு பிரிந்து சென்றவர்களால் எந்த பாதிப்பும் இல்லை. அவர்களும் தங்களது நிலைப்பாட்டை மாற்றி கொண்டு நிச்சயம் திரும்பி வருவார்கள். அதற்காக தான் நான் பொறுமையாக காத்து கொண்டு இருக்கிறேன். வரும் பாராளுமன்ற தேர் தலில் நாங்கள் மாபெரும் வெற்றி பெறுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story