டாஸ்மாக் கடையை மூடக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டம்


டாஸ்மாக் கடையை மூடக்கோரி வாயில் கருப்பு துணி கட்டி பெண்கள் போராட்டம்
x
தினத்தந்தி 12 Aug 2017 4:15 AM IST (Updated: 12 Aug 2017 1:07 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். 5–வது நாளான நேற்று பெண்கள் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தினர்.

பல்லடம்,

பல்லடம் அருகே உள்ள ஆலூத்துப்பாளையத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆலூத்துப்பாளையத்தில் புதிய டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் வந்தனர். அப்போது அப்பகுதி பொது மக்கள் தங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் தொடர்ந்து 13 நாட்களாக தொடர் போராட்டமும் நடத்தினர்.

இந்த நிலையில் ஆலூத்துப்பாளையத்தில் கடந்த 7–ந் தேதி டாஸ்மாக் கடை புதிதாக திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் கடை முன்பாக முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர். பின்னர் டாஸ்மாக் கடையை மூடக்கோரி காத்திருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் 4–வது நாளாக அந்த பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். முன்னதாக அப்பகுதி பொதுமக்களில் சிலர் மாவட்ட கலெக்டர், கலால் துறை அதிகாரி, டாஸ்மாக் மண்டல மேலாளர் ஆகியோரை சந்தித்து ஆலூத்துப்பாளையத்தில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என்று கோரி மனு கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து நேற்று 5 வது நாளாக அப்பகுதி பெண்கள் சம்பவ இடத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் தங்கள் வாயில் கருப்பு துணி கட்டி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.


Next Story