நாகை, கீழையூர் ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு


நாகை, கீழையூர் ஒன்றியங்களில் வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 11 Aug 2017 10:45 PM GMT (Updated: 11 Aug 2017 7:45 PM GMT)

நாகை மற்றும் கீழையூர் ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுனில்பாலிவால் ஆய்வு மேற்கொண்டார்.

வேளாங்கண்ணி,

நாகை மாவட்டம் கீழையூர் மற்றும் நாகை ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளை நாகை மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், உயர்கல்வித்துறை அரசு முதன்மை செயலாளருமான சுனில்பாலிவால், மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் ஆகியோர்் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகை ஒன்றியம் சிக்கல் ஊராட்சியில் நடைபெற்று வரும் வண்ணான் குளம் தூர்வாரும் பணி, தெற்கு பொய்கைநல்லூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் கட்டுமான பணிகள், ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கிராம சேவை மையத்தின் கட்டுமான பணி, வேட்டைக்காரனிருப்பு ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.90 ஆயிரம் மதிப்பில் செயல்பட்டு வரும் நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தெளிப்பு நீர் கருவி

பின்னர் கீழையூர் ஒன்றியம் விழுந்தமாவடி ஊராட்சியில் வேளாண்மை துறையின் சார்பில் குறுவை தொகுப்புத் திட்டம் மற்றும் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை பார்வையிட்டனர். அப்போது விவசாயிகளுக்கு வேளாண்மை துறையின் சார்பில் குறுவை தொகுப்புத்திட்டம் மற்றும் நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் பசுந்தாள் உரப்பயிர் விதைகள் மற்றும் தெளிப்பு நீர் கருவிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சுனில்பாலிவால் வழங்கினார்.

ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கருணாகரன், ஊகர வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர், உதவி கலெக்டர் கண்ணன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story