எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாரத்தான் ஓட்டம் அரியலூரில் நடந்தது


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாரத்தான் ஓட்டம் அரியலூரில் நடந்தது
x
தினத்தந்தி 12 Aug 2017 4:30 AM IST (Updated: 12 Aug 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அரியலூர் விளையாட்டு அரங்கில் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு நலத்துறையின் சார்பில் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

அரியலூர்,

இதனை அரசு தலைமை கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். மாரத்தான் ஓட்டத்தில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா பேசியதாவது:-

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

அரியலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வருகிற 23-ந் தேதி சிறப்பாக நடைபெறவுள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். விழாவையொட்டி அரியலூர் மாவட்டத்தில் ரத்ததான முகாம், கண் சிகிச்சை முகாம், கால்நடைகளுக்கு மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து, பள்ளி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும், கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும், மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும் மற்றும் பொதுமக்களுக்கு ஒரு பிரிவாகவும் மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தனசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) ராமசுப்பிரமணியராஜா, வளைகோல் பந்து பயிற்சியாளர் லெனின், உடற்பயிற்சி ஆசிரியர்கள், பயிற்றுனர்கள், அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story