‘முதல் போட்டியில் தெண்டுல்கரை வீழ்த்தியதை மறக்க முடியாது’


‘முதல் போட்டியில் தெண்டுல்கரை வீழ்த்தியதை மறக்க முடியாது’
x
தினத்தந்தி 11 Aug 2017 11:00 PM GMT (Updated: 2017-08-12T02:20:31+05:30)

‘முதல் போட்டியில் தெண்டுல்கரை வீழ்த்தியது மறக்க முடியாது’ என்று கோவையில் நடைபெற்ற மாணவ–மாணவிகளுடன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கூறினார்.

கோவை,

கோவை ஜி.ஆர்.டி. கல்லூரி அரங்கில் நேற்று மாணவ–மாணவிகளுடன் நேருக்கு, நேர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ் கலந்து கொண்டு மாணவ–மாணவிகள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். பின்னர் அவர் மாணவர்களுடன் சிறிது நேரம் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் டி.என்.பி.எல். போட்டி வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதன் மூலம் உள்ளூர் இளைஞர்கள் கிரிக்கெட் அணியில் இடம் பெற்று விளையாட அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது. மேலும் இந்த போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் ஐ.பி.எல். மற்றும் இந்திய அணியில் இடம் பெறவும் முடியும்.

எனது முதல் போட்டியில் சச்சின் தெண்டுல்கரை வீழ்த்தினேன். இது என்னால் மறக்க முடியாத ஒன்று. இந்திய அணியின் சிறந்த கேப்டனாக தோனி திகழ்ந்தார். அவரது தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. சென்னை அணி எனக்கு மிகவும் பிடித்தமான அணியாகும். ஐ.பி.எல். போட்டியில் இடம் பெற்ற அணிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் வாய்ந்த அணியாக இருந்தது. ஒரு வீரர் சிறப்பாக விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம், பந்து வீச்சு, காலநிலை ஆகியவையும் ஒரு காரணமாக உள்ளது. எனவே ஒரு கிரிக்கெட் வீரரை மற்றொரு வீரருடன் ஒப்பிடக்கூடாது.

தற்போது இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். இதேபோல் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட கிரிக்கெட் அணியின் கேப்டன்களும் தங்களது திறமையை நன்றாக வெளிப்படுத்தி விளையாடி வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story