நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஊர்வலம்
நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக்கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
நீட் தேர்வில் இருந்து புதுவைக்கு விலக்கு அளிக்க கோரியும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு வழங்க கோரியும், மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தினர் பழைய பஸ்நிலையம் அருகே ஒன்று கூடினர். அங்கிருந்து கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் நோக்கில் ஊர்வலமாக புறப்பட்டுச் சென்றனர்.
ஊர்வலத்திற்கு இந்திய மாணவர் சங்க தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் இந்திய மாணவர் சங்க செயலாளர் பாபு, துணைத் தலைவர்கள் விண்ணரசன், பிரபா, துணை செயலாளர்கள் சஞ்சய், ஜெயபிரகாஷ், கவியரசன் மற்றும் நிர்வாகிகள், 5 அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் அண்ணாசாலை நேருவீதி, மிஷன்வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுப்பு கட்டைகளை அமைத்து அவர்களை தடுத்து நிறுத்தினர். அங்கு மத்திய அரசை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் நீட் தேர்வில் இருந்து புதுவைக்கு விலக்கு அளிக்கக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
தொடர்ந்து இந்திய மாணவர் சங்க தலைவர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகள் சட்டசபை வளாகத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:–
புதுச்சேரி மாநிலத்திற்கு நீட் தேர்வில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய 50 சதவீத இடங்களை பெறுவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் நிகர்நிலை பல்கலைக் கழகங்களிடம் இருந்து பெறப்பட்ட புதுச்சேரி மாநில அரசு ஒதுக்கீட்டை பெற வேண்டும்.
மேலும் கடந்த 2016–ம் ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 283 இடங்கள் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்டது. நடப்பு ஆண்டில் (2017) புதுச்சேரியில் உள்ள 7 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3 கல்லூரிகள் மட்டுமே புதுச்சேரி அரசு ஒதுக்கீடாக 165 இடங்கள் வழங்கியுள்ளன. மேலும் 4 நிகர்நிலை மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக பெறப்பட்ட இடங்களை மத்திய அரசு பறித்து விட்டது. நடப்பு கல்வியாண்டில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் புதுச்சேரி மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய மீதியுள்ள 118 இடங்களை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.