தந்தை வாங்கிய கடனுக்காக மகன்களை கடத்தி சிறை வைத்த ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் கைது


தந்தை வாங்கிய கடனுக்காக மகன்களை கடத்தி சிறை வைத்த ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2017 5:30 AM IST (Updated: 12 Aug 2017 2:56 AM IST)
t-max-icont-min-icon

தந்தை வாங்கிய கடனுக்காக மகன்களை கடத்தி சிறை வைத்த ரியல் எஸ்டேட் அதிபர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி,

திருச்சி உய்யகொண்டான்திருமலையை சேர்ந்தவர் கணேசன்(வயது 45). லாரிகளை வாங்கி விற்கும் புரோக்கர். இவருடைய மனைவி ஈஸ்வரி. இவர்களுக்கு பாலகுமார்(20), சாந்தகுமார்(18) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கணேசன், அதேபகுதியை சேர்ந்த ரியல்எஸ்டேட் அதிபர் மணிகண்டனிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார். அந்த கடன்தொகையை திரும்ப செலுத்த முடியாமல் கணேசன் சிரமப்பட்டு வந்தார். தொடர்ந்து அவர் குடும்ப செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்தார். இதனால் ஈஸ்வரி தனது வீட்டை காலி செய்துவிட்டு, வேறு பகுதிக்கு குடி செல்ல நினைத்தார்.

கடத்தி சிறை வைப்பு

இதற்காக நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள சாமான்களை வேனில் ஏற்றி கொண்டு இருந்தார். இதுபற்றி மணிகண்டனுக்கு தெரியவந்தது. தனக்கு கொடுக்க வேண்டிய கடன்தொகையை தராமல் கணேசன் வீட்டை காலி செய்ய முடிவு எடுத்துவிட்டதாக எண்ணி, அங்கு வந்த மணிகண்டன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் கணேசனின் மகன்கள் பாலகுமார், சாந்தகுமார் ஆகிய 2 பேரையும் கடத்தி சென்று ஒரு வீட்டில் அடைத்து சிறை வைத்தனர்.
இது பற்றி அரசு மருத்துவமனை போலீசில் ஈஸ்வரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று வீட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த அவரது மகன்களை மீட்டு அழைத்து வந்தனர். இது தொடர்பாக மணிகண்டன், தினேஷ்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்களை நேற்று கைது செய்தனர்.

இரும்பு பொருட்கள் திருட்டு

*திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து திருவெறும்பூர் வரை உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் ரெயில்வேக்கு சொந்தமான இரும்பு பொருட்களை திருடியதாக வடக்கு காட்டூரை சேர்ந்த கதிரவன், மீனாட்சி, மாரியம்மாள் ஆகிய 3 பேரை சில நாட்களுக்கு முன்பு ரெயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். மேலும், திருடப்பட்ட இரும்புகளை விலைக்கு வாங்கியதாக தாராநல்லூரை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி பழனிவேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.19 ஆயிரம் மதிப்புள்ள இரும்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெண்களிடம் சங்கிலி பறிப்பு

*திருச்சி தில்லைநகர் காந்திபுரத்தை சேர்ந்த தனபாக்கியம் (68) என்பவர் கடந்த 4-ந் தேதி உறையூர் நாச்சியார் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்குள்ள அன்னதானம் வழங்கும் இடத்தில் அவர் நின்றபோது, தனபாக்கியம் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துகொண்டு தப்பி சென்றார். திருச்சி உறையூர் வாத்துக்காரதெருவை சேர்ந்தவர் காமாட்சி(61). இவர் கடந்த 5-ந் தேதி உறையூர் பஞ்சவர்ணசாமி கோவிலில் சாமி கும்பிட சென்றார். அங்கு அவர் சாமி தரிசனம் செய்துவிட்டு, பிரசாதம் வழங்கும் இடத்தில் நின்று கொண்டு இருந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் காமாட்சி கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி சென்று விட்டார். இது குறித்த புகார்களின்பேரில் உறையூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெட்ரோல் திருடிய சிறுவர்கள்

*ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சொந்தமான திருவானைக்காவல் -சென்னை பிரதான சாலையில் 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலம் தனியார் ஒருவரால் 100 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்து வந்தது தெரிய வந்தது. இதனை அண்மையில் கோவில் அதிகாரிகள் மீட்டு சம்பந்தப்பட்ட இடத்தை சுற்றி சுவர் எழுப்பி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான இடம் என்று பலகை வைத்துள்ளனர். அந்த நிலத்தின் இன்றைய மதிப்பு சுமார் ரூ.80 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

*திருச்சி செங்குளம் காலனி அரசு குடியிருப்பில் வசித்து வருபவர் உளவுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரசன்னவெங்கடேஷ். இவர் தனது மோட்டார் சைக்கிளை நேற்று முன்தினம் இரவு வீட்டு வாசலில் நிறுத்தி இருந்தார். அப்போது நள்ளிரவு அவரது மோட்டார் சைக்கிளில் இருந்து சிறுவர்கள் 4 பேர் பெட்ரோல் திருடினர். அவர்களில் 3 பேரை கண்டோன்மெண்ட் போலீசார் பிடித்தனர். ஒருவன் தப்பி ஓடி விட்டான். பிடிபட்ட 3 பேரும் 15 வயதுடைய சிறுவர்கள். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தீப்பிடித்து எரிந்த கார்

*திருவெறும்பூரை அடுத்த அம்மன் நகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது31). தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி இசாத் (29) டாக்டர். தம்பதிகள் இருவரும் தங்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் 10 பவுன் நகைகளை திருடி சென்றிருந்தது தெரிய வந்தது. இது குறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*தொட்டியத்தை சேர்ந்தவர் ரெஜினா ஜான்பேகம். வரதராஜபுரம் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான காரை பழுது பார்ப்பதற்காக நேற்று டிரைவர் நந்தகுமார் தொட்டியத்தில் இருந்து சித்தூர் வழியாக முசிறி செல்லும் சாலை வழியே ஓட்டி சென்றார். ஏரிகுளம் என்ற இடத்தின் அருகே சென்றபோது காரின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. பின்னர் அந்த கார் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இது குறித்த தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

சீட்டு விளையாடிய 5 பேர் கைது

*மணப்பாறையை அடுத்த அமயபுரத்தை சேர்ந்த முத்துக்குமார் மனைவி கவிதா என்பவர் அரசின் பசுமை வீடு கேட்டு விண்ணப்பிருந்தார். இவருடன் விண்ணப்பித்த மற்றவர்களுக்கு அதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் கவிதாவிற்கு மட்டும் ஆணை வரவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து முத்துக்குமார் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மேலும் ஒருவர் சேர்ந்து நேற்று முன்தினம் அமயபுரத்தில் அவ்வழியாக வந்த பஸ்சின் முன் நின்று கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர்.

*வையம்பட்டி அருகே உள்ள வையமலைப்பாளையம் வனப்பகுதியில் சீட்டு விளையாடிக் கொண்டிருந்த கருப்பன் (வயது 50), மகேஷ் (45), ஹரிகிருஷ்ணன்(45), வீரபாண்டி (48), காளியப்பன் (70) ஆகிய 5 பேரை வையம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,120 பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story