பண்ருட்டி பகுதியில் மழை: வெள்ளப்பெருக்கால் பாலங்கள் உடைந்தன, 50 கிராம மக்கள் பாதிப்பு


பண்ருட்டி பகுதியில் மழை: வெள்ளப்பெருக்கால் பாலங்கள் உடைந்தன, 50 கிராம மக்கள் பாதிப்பு
x
தினத்தந்தி 12 Aug 2017 4:00 AM IST (Updated: 12 Aug 2017 3:06 AM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி பகுதியில் மழை(சைடு பாக்ஸ்) வெள்ளப்பெருக்கால் 2 பாலங்கள் உடைந்தன போக்குவரத்து துண்டிப்பால் 50 கிராம மக்கள் பாதிப்பு

பண்ருட்டி,

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கன மழை பெய்தது. அப்போது ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் பண்ருட்டி அருகே உள்ள விசூர், பெரியகாட்டுப்பாளையம் ஆகிய 2 கிராம மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

இதில் பெரியகாட்டுப்பாளையத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உள்பட 10 பேரும், விசூரில் தாய், மகள் உள்பட 3 பேரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு பலியானார்கள். நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்தன. 50–க்கும் மேற்பட்ட வீடுகளும் மழையால் தரைமட்டமானது. விளைநிலங்களெல்லாம் மணல் மேடானது. அந்த பெரும் துயரத்தில் சிக்கியவர்கள் தற்போதுதான் சகஜ நிலைக்கு திரும்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் மீண்டும் அந்த 2 கிராம மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அது பற்றிய விவரம் வருமாறு:

கடந்த 2015–ம் ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கன மழைக்கு பிறகு, கடலூர் மாவட்டத்தில் சொல்லிக்கொள்கிற அளவுக்கு மழை பெய்யவில்லை. நிலத்தடிநீர்மட்டமும் மளமளவென குறைந்துள்ளது. இருப்பினும் கிடைக்கிற நிலத்தடி நீரை வைத்து நெல், கரும்பு, கம்பு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.

பண்ருட்டி பகுதியில் கடந்த 3 நாட்களில் பகலில் வெயிலும், இரவில் இடி, மின்னலுடன் மழையும் பெய்தது. நேற்று முன்தினம் பகலில் வழக்கம்போல் வெயில் சுட்டெரித்தது. நள்ளிரவுக்கு பிறகு பண்ருட்டி பகுதி முழுவதும் பலத்த மழை பெய்தது. உளுந்தூர்பேட்டை, நெய்வேலி பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. கெடிலம் ஆற்றிலும் தண்ணீர் சீறிப்பாய்ந்து சென்றது.

இதில் கருக்கை–விசூர் சாலையில் இருந்த தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டது. அதில் இருந்த குழாய்கள் உடைந்தன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. விளைநிலங்களுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் விசூரில் சாகுபடி செய்திருந்த நெல், கரும்பு, கம்பு உள்ளிட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைக்கு தயாராக இருந்த நூற்றுக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களும் மழைநீரில் மூழ்கி நாசமானது.

கடந்த 2015–ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது விசூரில் வெள்ளவாரி ஓடை கரை உடைந்தது. இதையடுத்து வெள்ளவாரி ஓடை இருபுற கரைகளும் ஆயிரக்கணக்கான மணல் மூட்டைகளால் அடுக்கி வைத்து பலப்படுத்தப்பட்டது. 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு அடுக்கி வைத்திருந்த மணல் மூட்டைகளும், நேற்று முன்தினம் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டன. இரு கரைகளிலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

பெரியகாட்டுப்பாளையத்தில் பெரிய ஓடையில் பாலம் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பாலமும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. இந்த பால பணிக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக புறவழிச்சாலையும் சேதமடைந்துள்ளது. இதனால் பண்ருட்டியில் இருந்து சேந்தநாடு, விசூர், பெரியகாட்டுப்பாளையம் வழியாக நெய்வேலிக்கு செல்லக்கூடிய வாகன போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள 50 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் விசூர், கருக்கை சாலையும் சேதமடைந்துள்ளது.

இது குறித்து விசூர் கிராம மக்கள் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் எங்களது கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அப்போது எங்களது விளைநிலங்கள் இருந்ததற்கான அடையாளம் தெரியாத அளவிற்கு மணல் மேடானது. அதன்பிறகு சர்வேயரை வரவழைத்து நிலத்தை அளந்து, அதனை செம்மைப்படுத்தி விவசாயம் செய்தோம். ஆனால் நேற்று நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துவிட்டது. இதற்கு நிரந்தர தீர்வு காண விசூரில் உள்ள கால்வாய்களை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். அதனை அகற்றி, கருங்கற்களால் கரைகளை பலப்படுத்த வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story