ஏற்காட்டில் மட்டும் வாழும் அதிசய பாம்பு


ஏற்காட்டில் மட்டும் வாழும் அதிசய பாம்பு
x
தினத்தந்தி 11 Aug 2017 10:30 PM GMT (Updated: 2017-08-12T03:30:58+05:30)

‘பாம்பு என்றால் படையும் நடுங்கும்‘ என்பார்கள். அந்த பாம்புகள் பொதுவாக நீளமான உடல் கொண்டதாக இருக்கும் என்பது நமக்கு தெரியும்.

ஏற்காடு,

அதாவது பாம்புக்கு தலை, நடு உடல், வால் என 3 பகுதிகள் உண்டு. வால் சிறுத்து இருக்கும். தலையின் மேல் முன் முனையில் மூக்கு துளைகள் இருக்கும். நாக்கின் நுனியானது இரண்டாக பிளந்திருக்கும். அதை அடிக்கடி வெளியே நீட்டும்.

ஆனால், இவற்றில் கேடய வால் பாம்பு மாறுபட்டவை. இந்தியாவில் 23 வகையான கேடய வால் பாம்புகள் உள்ளன. இவை சின்னதாகவே இருக்கும். அதிகபட்சம் 50 செ.மீ. நீளம் வரை வளரும். அழகாகவும், மின்னக்கூடியதாகவும் இருக்கும் இவை மலைப்பிரதேசங்களில் சோலைக்காடுகளில் வாழ்வதால் இதனை சோலைபாம்பு என்று அழைக்கின்றனர். நிலத்தின் உள்ளே வாழ்வதால் இதை மண்பாம்பு என்றும் அழைக்கின்றனர்.

ஏற்காடு மலையில் ‘எலியட்ஸ்‘, ‘ஷார்டிஸ்‘ என 2 வகையான கேடய வால் பாம்புகள் உள்ளன. இதுகுறித்து ஏற்காட்டை சேர்ந்த அறிவியல் எழுத்தாளர் இளங்கோ கூறியதாவது:-

இந்த வகை பாம்புகள் மிகவும் அரிதானவை. மண்ணுக்குள் மறைந்து வாழ்வதால் எளிதில் காண முடியாது. ‘எலியட்ஸ்‘ மண் பாம்பு இந்தியாவில் மட்டுமே வாழ்கிறது. குறிப்பாக தென்னிந்திய மலைப்பிரேதசங்களில் வாழ்கிறது. கோவை, திருநெல்வேலி, தென்னாற்காடு, விசாகப்பட்டினம் மற்றும் ஏற்காடு போன்ற பகுதிகளில் இவை காணப்படுகின்றன. ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த வால்டர் எலியட் என்கிற இயற்கையாளரின் நினைவாக அவருடைய பெயரை இந்த பாம்புக்கு கடந்த 1858-ம் ஆண்டில் வைத்தனர்.

இந்த பாம்பு பழுப்பு நிறத்திலும், சாக்லேட் பழுப்பு நிறத்திலும் இருக்கும். 18 முதல் 25 செ.மீ. நீளம் மட்டுமே வளரக்கூடியது. கழுத்துப்பகுதியைவிட தலை சிறியது, கூர்மையாக இருக்கும். வால்பகுதி குட்டையானது. மேலும் அது வித்தியாசமாக தெரியும். வால் பகுதி சாய்வாகத் துண்டிக்கப்பட்டதுபோல் இருக்கும். பகல் பொழுதிலும் இதை காணலாம். இவை மண்புழு மற்றும் புழுக்களை உண்டு வாழ்கின்றன.

‘ஷார்டிஸ்’ கேடய வால் பாம்பு அரிய வகையை சேர்ந்தது. உலகளவில் இது ஏற்காடு மலையில் (சேர்வராயன்மலை) மட்டுமே வாழக்கூடிய அதிசய பாம்பாகும். ஆகவே, இதை சேர்வராயன் மலை மண்பாம்பு என்று அழைக்கின்றனர். கடல் மட்டத்தில் இருந்து 4,500 அடி உயரத்தில் இவை வாழ்கின்றன. ஓரிட வாழ்வியான இது ஏற்காடு மலையில் ஈரம் நிறைந்த பகுதியின் நிலத்தினுள் மறைந்து வாழ்கிறது. தலை சிறியது, வால் பகுதி குட்டையாகவும், சாய்வாக துண்டிக்கப்பட்டது போலவும், நுனிப்பகுதி வளைந்தும் காணப்படுகிறது. இந்த பாம்பு அடர்ந்த பழுப்பு நிறத்தில் இருக்கும். உடல் மீது சற்று இடைவெளி விட்டு மஞ்சள் நிறத்தில் குறுக்கு பட்டைகள் உள்ளன. பார்க்க அழகாக இருக்கும் இந்த பாம்பின் உடல் சூரிய ஒளியில் மின்னும்.

இந்த பாம்பை மருத்துவர் ஜான் ஷார்ட் என்பவர் முதன்முதலாக 1863-ம் ஆண்டில் ஏற்காட்டில் கண்டுபிடித்தார். அவர் பாம்புகளை ஆய்வு செய்து வந்த பெடோம் என்பவருக்கு அன்பளிப்பாக இதை வழங்கினார். தனக்கு பரிசாக வழங்கிய ஷார்டினை கவுரவிக்கும் வகையில் இந்த வகை பாம்பிற்கு ‘ஷார்டிஸ்‘ என அவர் பெயரிட்டார். இந்த பாம்பின் விலங்கியல் பெயர் யுரோபெல்டிஸ் ஷார்டிடி என்பதாகும். இந்த பாம்புக்கு விஷம் கிடையாது. யாருக்கும் எந்த தீங்கும் செய்யாது. பாம்புகள் பற்றி சரியான விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் இந்த வகை பாம்புகள் அழிவை நோக்கிச்சென்று கொண்டிருக்கின்றன என்பது வேதனையளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story