‘புளூ வேல்’ விளையாட்டால் தொடரும் ஆபத்து: தற்கொலைக்கு முயன்ற பள்ளிக்கூட மாணவன் மீட்பு
இணையத்தில் விளையாடப்படும் ‘புளூ வேல்’ கேம் மூலம் தற்கொலைக்கு முயன்ற 9–ம் வகுப்பு மாணவனை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
புனே,
இந்த விளையாட்டு மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50–வது தினத்தன்று ‘தற்கொலை செய்துகொள்’ என்று நிபந்தனை விதிக்கிறது.
விளையாட்டு மிதப்பில் அதனை விளையாடுபவர்களும், உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்கின்றனர்.
மராட்டிய மாநில தலைநகரான மும்பையில் உள்ள அந்தேரி பகுதியை சேர்ந்த மன்பீரித் சிங் என்ற 14 வயது மாணவன், சமீபத்தில் புளூ வேல் கேம் விளையாடி தான் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டான்.இதேபோல், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 13 வயது சிறுவன், புளூ வேல் விளையாட்டுக்கு அடிமையாகி, தான் படித்து வரும் பள்ளிக்கூடத்தின் 3–வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றபோது, சக மாணவர்களால் கடைசி நிமிடத்தில் மீட்கப்பட்டான்.
இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள், மராட்டிய மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த தொழில் அதிபரின் 14 வயது மகன், திடீரென மாயமானான். பெற்றோர் எங்கு தேடியும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. போலீஸ் விசாரணையில், புளூ வேல் விளையாட்டுக்கு அடிமையான அவன், தனக்கு விதிக்கப்பட்ட தற்கொலை இலக்கை நிறைவேற்ற புனே நோக்கி பஸ்சில் சென்று கொண்டிருந்தது தெரியவந்தது.இதனால், சுதாரித்து கொண்ட போலீசார் புனே அருகே பிக்வான் பகுதியில் அவன் வந்த பஸ்சை மடக்கி பிடித்து, சிறுவனை மீட்டனர். அப்போது, போலீசாரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அவன் மவுனம் சாதித்தான். இதுபற்றி அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் பிக்வான் போலீஸ் நிலையம் வந்து, அறிவுரை கூறி அவனை அழைத்து சென்றனர்.
அவன் சோலாப்பூரில் உள்ள பிரபல பள்ளிக்கூடத்தில் 9–ம் வகுப்பு படித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மனித உயிர்களை காவு வாங்கும் இந்த புளூ வேல் கேம் கடந்த 2013–ம் ஆண்டு ரஷிய நாட்டில் உதயமானது. பிலிப் பியூடெய்க்கின் என்ற உளவியல் மாணவர் இந்த ஆன்லைன் விளையாட்டை கண்டறிந்தார். இதற்காக அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்து விசாரித்தபோது, ‘‘மதிப்பு அற்றவர்களை தற்கொலைக்கு தள்ளி சமூகத்தை தூய்மைப்படுத்துவதே என்னுடைய நோக்கம்’’ என்று குண்டை தூக்கிப் போட்டார்.