பிரபல நடிகர் உபேந்திரா அரசியலுக்கு வருகிறார் பா.ஜனதாவில் சேர முடிவா?
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வரும் உபேந்திரா அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளதாகவும், அவர் பா.ஜனதா கட்சியில் சேர முடிவு செய்திருப்பதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு,
அதே நேரத்தில் நடிகர் உபேந்திரா அரசியலுக்கு வர வேண்டும் என்று கூறியதுடன் அவரது அரசியல் பிரவேசத்திற்காக அவரது ரசிகர்கள் காத்திருந்து வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் உபேந்திரா அரசியலில் களமிறங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அரசியலில் ஈடுபடுவது தொடர்பாக தனது நெருங்கிய நண்பர்களுடன் அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2018) தேர்தல் நடைபெற உள்ளதால், இன்னும் 2 மாதத்தில் அவர் அரசியலில் களமிறங்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் போட்டியிட உபேந்திரா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் நடிகர் உபேந்திரா அரசியலில் களமிறங்குவது பற்றி அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை. இதுதொடர்பாக இன்று (சனிக்கிழமை) நடிகர் உபேந்திரா பத்திரிகையாளர்களை சந்தித்து பேச இருப்பதாகவும் கூறப்படுகிறது. நடிகர் உபேந்திரா அரசியலுக்கு வந்தால், அதனை வரவேற்போம் என்று கன்னட திரையுலகினர் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், நடிகர் உபேந்திரா தனிக்கட்சி எதுவும் தொடங்கவில்லை என்றும், அவர் பா.ஜனதா கட்சியில் சேர முடிவு செய்திருப்பதாகவும், இதுதொடர்பாக ஏற்கனவே அக்கட்சியின் மூத்த தலைவர் அசோக், நடிகர் உபேந்திராவை ரகசியமாக சந்தித்து பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.அந்த சந்தர்ப்பத்தில் நடிகர் உபேந்திராவை பா.ஜனதா கட்சியில் சேரும்படி அசோக் சொல்லியதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று (சனிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகிறார். இன்று மாலையில் அவர் வெவ்வேறு துறைகளை சேர்ந்த 600–க்கும் மேற்பட்ட பிரபலங்களை சந்தித்து பேச இருக்கிறார். அந்த நிகழ்ச்சியில் நடிகர் உபேந்திரா கலந்துகொள்ள உள்ளதாகவும், அவருடன் அமித்ஷா பேச இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலம் நடிகர் உபேந்திரா அரசியலில் களமிறங்குவது உறுதியாகி இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.