3 நாள் சுற்றுப்பயணமாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று பெங்களூரு வருகை

3 நாள் சுற்றுப்பயணமாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று (சனிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகிறார்.
பெங்களூரு,
3 நாள் சுற்றுப்பயணமாக பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா இன்று (சனிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகிறார். அவர் கட்சியை பலப்படுத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு (2018) நடைபெற உள்ளது. தென்இந்தியாவில் பா.ஜனதா கட்சியை பலப்படுத்த வேண்டும் என்றால், கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தேசிய தலைவர் அமித்ஷா தீவிரமாக உள்ளனர். குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் 150 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்று அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.இதனால் கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியை பலப்படுத்த, அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா 3 நாட்கள் சுற்றுபயணமாக இன்று (சனிக்கிழமை) பெங்களூருவுக்கு வருகை தர உள்ளார். இன்று காலை 10.30 மணியளவில் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு அமித்ஷா வருகிறார். அவரை வரவேற்க மாநில தலைவர் எடியூரப்பா தலைமையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பின்னர் மதியம் 12 மணியளவில் மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா அலுவலகத்திற்கு அமித்ஷா செல்கிறார். அங்கு கட்சி நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசுகிறார். அப்போது கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். மாலை 6 மணியளவில் தனியார் ஓட்டலில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த 600–க்கும் மேற்பட்ட பிரபலங்களை சந்தித்து அமித்ஷா பேச இருக்கிறார்.நாளை (ஞாயிற்றுக்கிழமை) பா.ஜனதா அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொள்கிறார். பின்னர் மண்டியா மாவட்டம் நாகமங்களாவில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு சென்று, மடாதிபதி பாலகங்காதரநாதாவை சந்தித்து அமித்ஷா ஆசி பெறுகிறார். அதன்பிறகு, ராமநகர் மாவட்டம் கனகபுராவில் உள்ள ரவிசங்கர் குருஜியின் மடத்திற்கு சென்று, அவரை சந்தித்து அமித்ஷா பேசுகிறார்.
மேலும் நாளை மாலையில் கட்சியின் முக்கிய தலைவர்களை சந்தித்து சட்டமன்ற தேர்தல் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். குறிப்பாக எடியூரப்பாவை மாநில தலைவராக நியமித்த பின்பு, அவர் கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தது தொடர்பாக மூத்த தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால், அதுதொடர்பாகவும் மூத்த தலைவர்களுடன் அமித்ஷா ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.மேலும் சட்டமன்ற தேர்தலையொட்டி தாலுகா அளவிலான நிர்வாகிகளில் இருந்து உயர் மட்டத்தில் உள்ள நிர்வாகிகள் வரை அனைவரையும் சந்தித்து பேச அமித்ஷா திட்டமிட்டுள்ளார். எடியூரப்பா, ஈசுவரப்பா இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாலும், அது சட்டமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாலும், அதனை களைய அமித்ஷா தீர்மானித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன. வருகிற 14–ந் தேதி (திங்கட்கிழமை) ‘விஸ்தாரக்‘ மூலம் வீடு, வீடாக சென்று மத்திய அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்து கூறிய தொண்டர்களை சந்தித்து, அவர்களுக்கு அமித்ஷா பாராட்டு தெரிவிக்க உள்ளார்.
பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா வருகையையொட்டி அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் மற்றும் அவர் செல்லும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.