படிக்கட்டில் தொங்கியபடி பயணம்: பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு


படிக்கட்டில் தொங்கியபடி பயணம்: பஸ்சில் இருந்து தவறி விழுந்து பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 12 Aug 2017 4:45 AM IST (Updated: 12 Aug 2017 4:29 AM IST)
t-max-icont-min-icon

பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த பள்ளி மாணவர் கீழே விழுந்து பலியானார். மேலும் 2 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை,

சென்னை நெற்குன்றம் சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் சுபாஷ்(வயது 17). இவர் கோடம்பாக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார். சுபாஷ் நேற்று காலை தனது பள்ளி நண்பர்களான அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக்(17), நெற்குன்றம் பகுதியை சேர்ந்த ஜீவா(17) ஆகிய இருவருடன் சேர்ந்து தியாகராயநகர் நோக்கி சென்ற மாநகர பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது பஸ்சில் அதிகளவு கூட்டம் இருந்ததால் சுபாஷ் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரும் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி சென்றனர். பஸ் வட பழனி ஆற்காடு சாலை சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரமாக இருந்த தூணில் பஸ் லேசாக உரசியது.

இதில் பஸ்சின் முன்பக்க படியில் பயணம் செய்த சுபாஷ், கார்த்திக், ஜீவா ஆகிய 3 மாணவர்களும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் மற்றும் பஸ்சில் இருந்த பயணிகள் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த போலீசார் படுகாயம் அடைந்த 3 மாணவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வழியிலேயே சுபாஷ் பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திக், ஜீவா ஆகிய 2 பேரின் உடல் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் 2 பேருக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பின்னர் சுபாஷின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் டிரைவரான விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் பகுதியை சேர்ந்த பார்த்திபனை(30) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story