ஆம்பூரில் பள்ளியின் நுழைவுவாயிலில் குளம்போல் தேங்கியிருக்கும் மழைநீர்


ஆம்பூரில் பள்ளியின் நுழைவுவாயிலில் குளம்போல் தேங்கியிருக்கும் மழைநீர்
x
தினத்தந்தி 12 Aug 2017 4:39 AM IST (Updated: 12 Aug 2017 4:39 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் பள்ளியின் நுழைவுவாயிலில் குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

ஆம்பூர்

ஆம்பூர் பஸ் நிலையத்தை யொட்டி அரசு நிதியுதவி பெறும் இந்து மேல்நிலைப்பள்ளி, இந்து மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒரே இடத்தில் உள்ளது. இந்த 2 பள்ளிகளிலும் மொத்தம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தேசிய நெடுஞ்சாலையை யொட்டி இப்பள்ளிகள் அமைந்துள்ளன.

தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் செல்ல கால்வாய்கள் அமைக்கப்பட்டு இருந்தாலும், அதில் மழைநீர் செல்லாமல் சாலையில் தேங்கி நிற்கும் நிலைதான் உள்ளது. இந்த பள்ளியின் நுழைவுவாயில் அருகே லேசான மழைக்குகூட மழைநீர் தேங்கிவிடும். தற்போது கடந்த சில நாட்களாக ஆம்பூரில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீர் அந்த பள்ளியின் நுழைவுவாயில் அருகே பெரிய குளம்போன்று தேங்கி உள்ளது.

பள்ளியின் நுழைவு வாயிலில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மாணவ, மாணவிகள் பள்ளிக்குள்ளே செல்ல பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த ஒருவாரமாக இவ்வாறு மழைநீர் தேங்கி உள்ளது. இந்த மழைநீரை வெளியேற்றவோ, அங்கு மழைநீர் தேங்காமல் இருக்கவோ எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, பள்ளி நிர்வாகமோ அல்லது தேசிய நெடுஞ்சாலை துறையினரோ அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளி மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story