பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்


பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 11 Aug 2017 11:10 PM GMT (Updated: 11 Aug 2017 11:09 PM GMT)

பெரியபாளையம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரியபாளையம்,

பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் ஊராட்சியில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் 8 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததால் மேல்நிலை தொட்டிகளில் தண்ணீர் ஏற்றுவது பாதிக்கப்பட்டது. கடந்த 2 மாதமாக ஒரு தொட்டியில் மட்டும் மின்மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டது

இந்த நிலையில் கடந்த 2 வாரமாக அந்த மின்மோட்டாரும் இயக்கவில்லை. இதனால் குடிநீர் வினியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளானார்கள்.

மறியல்

இது குறித்து எல்லாபுரம் ஒன்றிய அதிகாரிகளுக்கு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து குடிநீர் வழங்கக்கோரி அந்த பகுதி பொதுமக்கள் 100–க்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் பெரியபாளையம்–ஆவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

வெங்கல் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் பரிபூரணம், சந்திரசேகர் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story