திருவண்ணாமலையில் சுகாதார விழிப்புணர்வு ரதம்


திருவண்ணாமலையில் சுகாதார விழிப்புணர்வு ரதம்
x
தினத்தந்தி 11 Aug 2017 11:19 PM GMT (Updated: 11 Aug 2017 11:18 PM GMT)

திருவண்ணாமலையில் சுகாதார விழிப்புணர்வு ரதத்தை கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் திறந்தவெளி மலம் கழித்தலில் இருந்து விடுதலை என்ற கருத்தை வலியுறுத்தி 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை சுகாதார விழிப்புணர்வு வாரத்தையொட்டி சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஊர்வலம், கலை நிகழ்ச்சி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதைப் போட்டி, ஓவியப் போட்டி மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கோலப் போட்டி ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் சுகாதார விழிப்புணர்வு ரதம் அனைத்து ஊராட்சிகளுக்கும் யாத்திரையாக சென்று சுத்தம், சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. இதன் தொடக்க விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட அலுவலர் மகளிர் திட்டம் ஜெயசுதா வரவேற்றார். மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே தலைமை தாங்கி, சுகாதார விழிப்புணர்வு ரத யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த ரத யாத்திரை மூலம் பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு, கழிவறை கட்டும் தொழில்நுட்பம், கழிவறை தொடர் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல், ஒலி, ஒளி காட்சிகள், கலை நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story