தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மரபினர் நல விடுதிகளில் பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் தேர்வு


தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மரபினர் நல விடுதிகளில் பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் தேர்வு
x
தினத்தந்தி 12 Aug 2017 8:30 PM GMT (Updated: 12 Aug 2017 11:32 AM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மரபினர் நல விடுதியில் பணியாற்ற பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் சீர்மரபினர் நல விடுதியில் பணியாற்ற பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;–

துப்புரவு பணியாளர்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ–மாணவிகளின் நலன் கருதியும், விடுதிகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும் வகையில், 100 மாணவ–மாணவிகளுக்கு குறைவாக உள்ள விடுதிகளில் பகுதிநேர துப்புரவு பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். அதன்படி 18 ஆண் பகுதி நேர துப்புரவு பணியாளர்களும், 13 பெண் பகுதிநேர துப்புரவு பணியாளர்களும் ரூ.2 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில், நேர்காணல் மூலம் இனசுழற்சி அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இனசுழற்சி விவரங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி தெரிந்து கொள்ளலாம். இந்த பகுதி நேர பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதி

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்வி தகுதி 8–ம் வகுப்பிற்கு கீழ், தமிழில் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 1.7.2017 அன்று 18 முதல் 35 வயதிற்குள்ளும், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கு 18 முதல் 32 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். இதர பிரிவினருக்கு 18 முதல் 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி வயது வரம்பில் 10 ஆண்டுகள் சலுகை உண்டு.

விண்ணப்பதாரர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் விடுதி அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்துக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும். விடுதி அமைந்துள்ள இடத்திற்கு எதிரே குறிப்பிட்டுள்ள இனசுழற்சி அடிப்படையில் தகுதியான நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம்

இந்த தகுதி அடிப்படையில் பகுதி நேர துப்புரவு பணியாளராக பணியாற்ற விருப்பம் உள்ள நபர்கள், தங்களின் பெயர், தகப்பனார் அல்லது கணவர் பெயர், பாலினம், பிறந்த தேதி, அஞ்சல் முகவரி, கல்வி தகுதி, வேலைவாய்ப்பு பதிவு விவரம், ரே‌ஷன் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒன்று, ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களுடன், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தரைதளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 23–ந்தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆய்விற்கு பின்னர் தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story
  • chat