தாம்பரத்தில் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் கைது
தாம்பரத்தில் ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தாம்பரம்,
சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் இந்துமதி (வயது 27) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 2015–ம் ஆண்டு முதல் பம்மல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அந்த பள்ளியின் தாளாளராக மேற்கு மாம்பலம் வீராசாமி தெருவை சேர்ந்த ரவி (45) பணிபுரிந்து வந்தார்.
பள்ளிக்கு வரும் ஆசிரியை இந்துமதியிடம் ஆபாச வார்த்தைகளால் பேசியும், செல்போனில் குறுஞ்செய்தி அனுப்பியும் ரவி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், கடந்த 2 மாதத்துக்கு முன்பு இந்துமதி தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார்.
சிறையில் அடைப்புஇந்த நிலையில், வேலைக்கு சேரும்போது கொடுத்து இருந்த தனது அசல் சான்றிதழ்களை வாங்குவதற்காக அவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றார். அப்போது தாளாளர் ரவி, இந்துமதியிடம் தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்றும், அப்போதுதான் அசல் சான்றிதழ்களை கொடுப்பேன் என்றும், இல்லையென்றால் உன்னைப்பற்றி அவதூறு பரப்பிவிடுவேன் என்றும் மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் தாம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.