மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்


மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 12 Aug 2017 10:30 PM GMT (Updated: 12 Aug 2017 8:49 PM GMT)

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

சிவகங்கை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 35 முதன்மை அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கும், 397 குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கும், 368 முதன்மை அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்களுக்கும் தகுதியின் அடிப்படையில் நேர்முக தேர்வு நடத்தி இன சுழற்சி முறையில் நியமனம் செய்ய தகுதி உள்ள பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முதன்மை அங்கன்வாடி பணியாளர் மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், 1.7.2017 அன்று 25 வயது நிரம்பியவராகவும், 35 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விதவை மற்றும் ஆதரவற்றோர் 40 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம்.

முதன்மை அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்தவராகவும், 1.7.2017 அன்று 20வயது நிரம்பியவராகவும், 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். விதவை மற்றும் ஆதரவற்றோர் 45 வயதிற்குட்பட்டவராக இருக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் காலியாக உள்ள மைய ஊரில் வசிப்பவராகவோ அல்லது 10 கி.மீ. சுற்றளவிற்குள் வசிப்பவராகவோ இருத்தல் வேண்டும். தகுதியான மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரருக்கு 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

காலிப்பணியிட மையங்களின் விவரம் மற்றும் இனச்சுழற்சி முறையிலான இட ஒதுக்கீட்டின்படி விண்ணப்பம் செய்ய வேண்டிய இனவாரியான விவரங்களை தொடர்புடைய வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் தெரிந்து கொள்ளலாம். மாதிரி விண்ணப்ப படிவம் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் இணையதளத்தில் www.icds.tn.gov.in வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மாதிரி விண்ணப்ப படிவம் சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகம் மற்றும் மாவட்ட திட்ட அலுவலகத்தில்(ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) பெற்று கொள்ளலாம்.

எனவே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.icds.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்ப படிவத்துடன் கல்விச்சான்று, வயது சான்று, இருப்பிட சான்றுக்கான ஆதார் கார்டு, ரே‌ஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகத்தில் வருகிற 25–ந்தேதி மாலை 4 மணிக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story