வெங்கடேஸ்வரசாமி கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் திரளான பக்தர்கள் பங்கேற்பு


வெங்கடேஸ்வரசாமி கோவிலில் ஆடி மாத சிறப்பு பூஜைகள் திரளான பக்தர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Aug 2017 10:30 PM GMT (Updated: 12 Aug 2017 9:08 PM GMT)

ஓசூர் அருகே கோபசந்திரத்தில் வெங்கடேஸ்வரசாமி கோவிலில் ஆடி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே காமன்தொட்டி பக்கமுள்ள கோபசந்திரம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரையில் மலை மீது வெங்கடேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவிலாகவும் விளங்கி வருகிறது.

ஆடி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி கோபசந்திரம் வெங்கடேஸ்வர சாமி கோவிலில் நேற்று அதிகாலை சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சர்வ தரிசன நிகழ்ச்சி நடந்தது. மேலும் சாமிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் சாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவையொட்டி, ஓசூர், சூளகிரி, பேரிகை, உத்தனபள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்தும், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் அதிகாலை முதலே கோவிலுக்கு வந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர், உற்சவமூர்த்தி பிரகாரத்தை சுற்றி உலாவாக அழைத்து செல்லப்பட்டார்.

பக்தி சொற்பொழிவு

விழாவையொட்டி, கோவில் வளாகத்தில், கொம்மேபள்ளி வேணு குழுவினரின் நாதஸ்வர கச்சேரி, பெங்களூரு நாட்டிய குழுவின் சார்பில் பரதநாட்டிய நிகழ்ச்சி, பக்தி சொற்பொழிவு, இசை நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீவெங்கடேஸ்வரசாமி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதேபோல், சூளகிரி அருகே அங்குசகிரி திம்மராய சாமி கோவில், சூளகிரி வரதராஜசாமி கோவில், ஓசூர் வெங்கடேஷ் நகரில் உள்ள பெருமாள் கோவில், பாகலூர் அருகே குடிசெட்லு திம்மராயசாமி கோவில் ஆகிய பெருமாள் கோவில்களிலும் நேற்று ஆடி மாத 3 -வது சனிக்கிழமையை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 

Next Story