என்.எஸ்.பி. சாலையில் உள்ள வணிக வளாகங்களை இழுத்து மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்


என்.எஸ்.பி. சாலையில் உள்ள வணிக வளாகங்களை இழுத்து மூடி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்
x
தினத்தந்தி 13 Aug 2017 4:45 AM IST (Updated: 13 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி என்.எஸ்.பி. சாலையில் உள்ள வணிக வளாகங்களை கோர்ட்டு உத்தரவின்பேரில் உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் இழுத்து மூடி ‘சீல்’ வைத்தனர்.

மலைக்கோட்டை,

திருச்சி மலைக்கோட்டை பகுதி என்.எஸ்.பி. சாலையில், சென்னையை தலைமையிடமாக கொண்ட ஒரு தனியார் நிறுவனத்தின் வணிக வளாகம் 4 மாடி கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதன் பின்பகுதியில் மற்றொரு வணிக வளாகம் உள்ளது. அங்கு செல்போன், எலக்ட்ரானிக்ஸ், குளிர்பானம், வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்பட தரைத்தளத்தில் 131 கடைகள், முதல் மாடியில் 91 கடைகள் என மொத்தம் 222 கடைகள் உள்ளன.

இதே பகுதியில் பழச்சாறு கடை நடத்தி வருபவர் திருச்சியை சேர்ந்த ஆயிஷாபேகம். இவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான், திருச்சி மலைக்கோட்டை என்.எஸ்.பி. சாலையில் பழச்சாறு கடை நடத்தி வருகிறேன். என்னுடைய கடைக்கு அருகில் சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. எனது கடை உள்ள இடமும், தனியார் நிறுவன வணிக வளாக இடமும் ஆற்காடு நவாப்புக்கு சொந்தமானவை. தனியார் நிறுவன வணிக வளாக கட்டிட வரைபட அனுமதியில், எனது கடைக்கு வடக்கு பகுதியில் 15 அடி காலியிடம் விட வேண்டும். 2 மாடி கட்டிடம் தான் கட்டப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் நிபந்தனைகளை மீறி 4 மாடி கட்டிடம் கட்டப்பட்டது. மேலும் எனது கடைக்கு அருகில் 1 அடி மட்டுமே காலியிடம் விடப்பட்டுள்ளது. இதனால் எனது கடையின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. அதேபோல வணிக வளாக தரைத்தளத்தில் வாகன நிறுத்தத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த பகுதியும் கடைகளாக மாற்றப்பட்டுள்ளது. தற்போது அதையும் மீறி, கூடுதலாக கட்டிடம் கட்ட முயன்று வருகிறார்கள். ஏற்கனவே 2012-ம் ஆண்டு இந்த வணிக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே தற்போது வணிக வளாகத்தில் நடந்து வரும் கட்டிடப்பணி களை நிறுத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு நீதி பதிகள், “வணிக வளாகம் கட்டியதில் விதிமீறல் நடந்துள்ளது. எனவே வணிக வளாகத்துக்கு திருச்சி உள்ளூர் திட்டக் குழும அதிகாரிகள் உடனடியாக ‘சீல்’ வைக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். பின்னர் ‘சீல்’ வைத்தது தொடர்பான அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வருகிற 16-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதன்படி நேற்று காலை உள்ளூர் திட்டக்குழும உறுப்பினர் செயலர் கைலாசம் தலைமையில், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று தனியார் வணிக வளாகத்தை பூட்டி ‘சீல்’ வைத்தனர். மேலும் அதே நிலத்தில் 222 கடைகளுடன் உள்ள மற்றொரு வணிக வளாகத்தையும், அங்கிருந்த கடைகளையும் பூட்டி ‘சீல்’ வைத்தனர்.

பின்னர், அனுமதிக்கு மாறாக மற்றும் கூடுதலாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடம், நகர ஊரமைப்பு சட்டம் 1971 பிரிவு 56(2)(யு)ன் கீழ் மூடி முத்திரையிடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு நோட்டீசை வளாகத்தின் முன்பு ஒட்டினார்கள்.

திடீரென வணிக வளாகங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த வணிக வளாக உரிமையாளர்கள், கடை வைத்துள்ள வியாபாரிகள், உள்ளூர் திட்டக்குழும அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பின்றி எப்படி ‘சீல்’ வைக்கலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பினர். உடனே அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனாலும் வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், வியாபாரிகள் தங்களது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். திருச்சி மாநகரின் முக்கிய வர்த்தக பகுதியான என்.எஸ்.பி. சாலையில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகங்களுக்கு கோர்ட்டு உத்தரவின்படி ‘சீல்’ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story