மதுரை கூடல்நகரில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் சூறையாடப்பட்டன 9 பெண்கள் கைது


மதுரை கூடல்நகரில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகள் சூறையாடப்பட்டன 9 பெண்கள் கைது
x
தினத்தந்தி 13 Aug 2017 8:00 AM IST (Updated: 13 Aug 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

மதுரை கூடல்நகரில் அடுத்தடுத்து 2 டாஸ்மாக் கடைகளை பெண்கள் அடித்து நொறுக்கினர். இதையொட்டி 9 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

மதுரை,

மதுரை கூடல்நகர் பகுதியில் 6–க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும், விபத்தும் ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த கடைகளை மூடக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தினர். ஆனால் கடைகள் மூடப்படவில்லை.

இந்நிலையில் கூடல்நகர் அஞ்சல்நகரில் உள்ள டாஸ்மாக் கடையை அங்கு பணிபுரியும் விற்பனையாளர்கள் மாரிச்சாமி, மாரிமுத்து ஆகியோர் நேற்று காலை திறந்தனர். அப்போது அங்கு வந்த பெண்கள், கடை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து கம்பு மற்றும் கற்களுடன் கடைக்குள் புகுந்த அவர்கள் விற்பனையாளர்கள் இருவரையும் சரமாரியாக தாக்கி விட்டு கடையை அடித்து நொறுக்கினர். மேலும் அங்கிருந்த மதுபாட்டில்களை எடுத்து கொண்டு வந்து சாலையில் போட்டு உடைத்தனர்.

இதற்கிடையே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் அதன் அருகில் உள்ள மற்றொரு டாஸ்மாக் கடையை நோக்கி சென்றனர். அங்கு தண்ணீர் பாட்டில், கண்ணாடி பெட்டி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர். மேலும் அதன் அருகில் இருந்த பாரில் மேஜை, நாற்காலி உள்ளிட்டவற்றையும் அடித்து நொறுக்கினர். அடுத்தடுத்து இருந்த 2 டாஸ்மாக் கடைகளிலும் பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடல்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் மரியதங்கம்(வயது 40) மற்றும் 8 பெண்களை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து டாஸ்மாக் கடை விற்பனையாளர் ஒருவர் கூறும்போது, கூடல்நகர் பகுதியில் ஏற்கனவே 6–க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்தநிலையில் மேலும் புதிதாக ஒரு டாஸ்மாக் கடை திறப்பதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. இதை அறிந்த பெண்கள் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தனர். அப்போது அதில் சிலர் எங்கள் கடையையும், எங்களையும் தாக்கி விட்டு சென்றனர். ஏற்கனவே 6 கடைகள் இருக்கும் இடத்தில் மேலும் ஒரு கடையை திறந்தால் பொதுமக்கள் ஆவசம் அடையத்தான் செய்வார்கள் என்றார்.


Next Story